
பாஜகவுடன் திமுக மறைமுக கூட்டணியில் உள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 'கள ஆய்வுக் குழு' ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது அக்குழுவுக்கு பல்வேறு ஆலோசனைகளை எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், களப்பணிகள் ஆய்வு குழுவைப் பொறுத்தவரை பல அறிவுரைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
அது கட்சி ஆலோசனை, அதை வெளியில் கூற விரும்பவில்லை என்றார். அதிமுக பாஜக கூட்டணி குறித்து பேசிய ஜெயக்குமார், பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை. இன்று, நாளை என பாஜகவுடன் இப்போதும் கூட்டணி இல்லை, எப்போதும் கூட்டணி இல்லை. இதுதான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டில் எந்த வகையிலும் மாற்றமில்லை. உள்ளத்தில் ஒன்று உதட்டில் ஒன்று என திமுகவை போல ஒரு மறைமுக கூட்டணியில் அதிமுக இருக்காது.
திமுக எம்பிக்கள் வைக்கும் பார்ட்டியில் ஜெபி நட்டா கலந்து கொள்கிறார். அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிக்கு ராஜ்நாத் சிங்கை அழைக்கிறார்கள். உதயநிதி, பிரதமரை சந்திக்கிறார் என்றால் எந்த அளவுக்கு திமுகவும், பாஜகவும் மறைமுகமான இணக்கத்துடன் உள்ளது. பாஜகவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்துடனும் திமுக செயல்படுகிறது. இந்த நிலை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரை கிடையாது என்றார்.
அதிமுகவில் முன்னாள் அமைச்சா்கள் 10 போ் கொண்ட கள ஆய்வுக் குழுவை கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவித்தார். குழுவில் முன்னாள் அமைச்சா்களான கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமாா், சி.வி.சண்முகம், செ. செம்மலை, பா. வளா்மதி, வரகூா் அ. அருணாசலம் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.