Raj Gauthaman
ராஜ் கௌதமன்படம்: Tamil wiki

எழுத்தாளர் ராஜ் கௌதமன் காலமானார்!

எழுத்தாளர் ராஜ் கெளதமன் புதன்கிழமை அதிகாலை காலமானார்.
Published on

தமிழ் எழுத்தாளர், பேராசிரியர் ராஜ் கெளதமன் (வயது 74) புதன்கிழமை அதிகாலை காலமானார்.

கடந்த சில நாள்களாக உடல் நலம் குன்றி இருந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் தூக்கத்திலேயே ராஜ் கெளதமனின் உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், புதுப்பட்டி கிராமத்தில் 1950 ஆண்டு பிறந்த எஸ்.புஷ்பராஜ், பின்னாளில் தனது பெயரை ராஜ் கௌதமன் என மாற்றிக் கொண்டார்.

புதுப்பட்டி கிராமத்தில் ஆரம்பக் கல்வியை முடித்த ராஜ் கௌதமன், மதுரையில் உயர்நிலைக் கல்வியையும், பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பை முடித்து புதுச்சேரி அரசு கலைக் கல்லூரியில் தமிழ்துறை பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

நாவலாசிரியர் அ. மாதவையா குறித்த ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்ற ராஜ் கெளதமன், மார்க்சிய சமூகவியலிலும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

பண்பாட்டு ஆய்வாளராக அறியப்பட்ட ராஜ் கௌதமன், தலித்தியம், பின்நவீனத்துவம், பழந்தமிழ் இலக்கியம் தொடர்பில் பல ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளார். சிலுவைராஜ் சரித்திரம், லண்டனில் சிலுவைராஜ், காலச்சுமை ஆகிய நாவல்களையும் எழுதியுள்ளார்.

சார்லஸ் டார்வினின் ‘தி ஒர்ஜின் ஆஃப் ஸ்பைசெஸ்’ (உயிரினங்களின் தோற்றம்), எரிக் ஃப்ராமின் ’தி சான் சொசைட்டி’ (மனவளமான சமுதாயம்) ‘தி ஆர்ட் ஆஃப் லவ்விங்’ (அன்பு எனும்), போன்ற பல்வேறு பிரபல நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.

ராஜ் கெளதமனின் மனைவி எழுத்தாளர் பரிமளா. இவர்களின் ஒரே மகள் லண்டனில் மருத்துவராக உள்ளார்.

இவரது இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை காலை பாளையங்கோட்டையில் உள்ள வீட்டில் நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com