சென்னையில் நடைபெற்ற விமானப் படை சாகச நிகழ்ச்சியைக் காண வந்த மக்கள் பலரும் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டதற்கு திமுக எம்.பி கனிமொழியும் கூட்டணி கட்சியினரும் விமர்சித்துள்ளனர்.
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று (அக். 6) விமானப் படையின் 92- ஆவது ஆண்டு விழா சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைப் பார்வையிட பல லட்சம் மக்கள் கூடியதைத் தொடர்ந்து கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். 240-க்கும் மேற்பட்டோா் மயங்கி விழுந்து, அவா்களில் 93 போ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.
இதனைத் தொடர்ந்து திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி தனது எக்ஸ் தளப் பதிவில், “சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ராணுவ விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் அவதியுற்றதும், வெப்ப நிலையும் அதிகமாக இருந்த நிலையில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்த திமுக கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “ கொளுத்தும் வெயிலில் சுமார் பத்துலட்சத்திற்கும் மேறபட்ட மக்கள் கூடும் பொழுது அங்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும். அதன்காரணமாக உடலில் நீர்சத்து குறைந்து மயக்கம் ஏற்படும்.சிலருக்கு மாரடைப்பும் ஏற்படும். இது அறிவியல் எதார்த்தம். இதையெல்லாம் திட்டமிட்டு ஏற்பாடுகளைச் செய்த பிறகே அரசு இந்த நிகழ்விற்கு பொதுமக்களை அனுமதித்திருக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முறையான முதல் உதவி சிகிச்சை மையங்களையும் ஏற்பாடு செய்யவில்லை என்றே தெரிகிறது. குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிப்புக்கு உள்ளானதையும் காண முடிகிறது.
எந்த அரசு தன்நலன் பேணாது தன் மக்கள் நலனையே பெரிதாக பேணும் அரசோ அந்த அரசே மக்களுக்கான அரசாக விளங்கும். அரசின் கவனக்குறைவால் வான் படை சாகச நிகழ்வு சாதனை நிகழ்வாக மாறாமல் வேதனை நிகழ்வாக மாறிவிட்டது. அரசு இனிவரும் காலங்களிலாவது இது போன்ற நிகழ்வுகளில் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினரான கார்த்தி சிதம்பரம் இந்த நிகழ்வு குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் “வானத்தில் சாகசம், தரையில் சோகம்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த நிகழ்வு குறித்த முறையான முன்னேற்பாடுகளை அரசு செய்யத் தவறியதாக பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்நிகழ்ச்சியை முறையாகத் திட்டமிட்டு நடத்துவதற்காகத் தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் ஒருங்கிணைப்புக் கூட்டம் இந்திய விமானப்படை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசுத் துறை அலுவலர்களுடன் ஒருமுறையும் பின்னர் துறை அளவில் பலமுறையும் நடத்தப்பட்டன.
நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மாநில அரசின் சார்பாக இரண்டு சுகாதாரக் குழுக்கள், போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டது. இது மட்டுமின்றி இந்திய இராணுவத்தின் சார்பாகவும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இது தவிர அவசர மருத்துவ உதவிக்காக 40 ஆம்புலன்சுகளும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. போதுமான அளவு பாராமெடிக்கல் குழுக்களும் அமைக்கப்பட்டு இருந்தன.
அதிகளவில் பொதுமக்கள் வரும் வாய்ப்பு உள்ளதைக் கருத்தில்கொண்டு 7500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னையில் இன்று நடைபெற்ற இந்திய விமானப் படையின் நிகழ்ச்சிக்கு அவர்கள் கோரியதற்கு மேலாகவே அனைத்து வசதிகளும் ஏற்பாடுகளும் தமிழ்நாடு அரசால் செய்து தரப்பட்டன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.