தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் இளைஞர்கள் தன்னெழுச்சியாக பங்கேற்றுள்ளதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. நடிகரும் கட்சியின் தலைவருமான விஜய்யின் முதல் உரையை காண லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடியிருந்தனர்.
மாநிலத்தை ஆளும் திமுகவையும், மத்தியில் ஆளும் பாஜகவையும் விஜய் விமர்சித்து பேசியிருந்தார்.
இந்த நிலையில், இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்த பின் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
"விஜய்யின் மாநாடு மிகப் பெரிய துவக்கமாக அமைந்துள்ளது, இளைஞர் சமுதாயம் திமுகவை ஏற்றுக் கொள்ளவில்லை என விஜய்யின் மாநாட்டு வாயிலாக புரிந்து கொள்ள முடிகிறது.
விஜய்யின் மாநாட்டில் இளைஞர்கள் தன்னெழுச்சியாக பங்கேற்றுள்ளனர், வாரிசு அரசியலை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, தவெக மாநாட்டில் எம்.ஜி.ஆரை சுட்டிக் காட்டி பேசியதை அதிமுக வரவேற்கிறது.
திமுகவை தமிழ்நாட்டு மக்கள் எதிர்க்கிறார்கள் என்பதற்கு தவெக மாநாடு எடுத்துக்காட்டாக உள்ளது. சபரீசனை பார்க்காமல் தமிழகத்தில் யாரும் தொழில் தொடங்க முடியாத சூழல் உள்ளது.
தவெகவால் அதிமுகவுக்கு எள் முனையளவுகூட பாதிப்பில்லை, ஆளும் கட்சியான திமுகவுக்கு தான் தவெக பாதிப்பாக இருக்கும், தவெக கொள்கைகள் வரவேற்கதக்கது.
அதிமுகவின் 52 ஆண்டுகளில் 32 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது, அதிமுக மக்களின் நிரந்தர வாக்கு வங்கியை கொண்டுள்ளது, உதயநிதி ஸ்டாலினுக்கு பட்டம் சூட்டியதை தமிழ்நாட்டு மக்கள், இளைஞர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, இளைஞர் சமுதாயம் கொதித்து போயி விஜய் மாநாட்டுக்கு சென்றுள்ளனர்" எனக் கூறினார்.