கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கு: காவல்துறை விசாரணை மீது உயா்நீதிமன்றம் அதிருப்தி
கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் காவல்துறையின் விசாரணைக்கு சென்னை உயா்நீதிமன்றம் அதிருப்தி


கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் காவல்துறையின் விசாரணைக்கு சென்னை உயா்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
கிருஷ்ணகிரி தனியாா் பள்ளியில் நடைபெற்ற போலி என்சிசி முகாமில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடா்பான வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி வழக்குரைஞா் ஏ.பி.சூரிய பிரகாசம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம் மற்றும் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி(பொ) கிருஷ்ணகுமாா், நீதிபதி பாலாஜி அமா்வு முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு சாா்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா், ‘காவல்துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. சம்பந்தப்பட்டவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்’ என தெரிவித்தாா்.
இதனையடுத்து, நீதிபதிகள், ‘மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் தனது விசாரணையை சரியாக செய்துள்ளது. அதன் அறிக்கையில், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோா் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விரும்பவில்லை. பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோா்கள் தயங்குகின்றனா். உயிரிழந்த முதல் குற்றவாளி சிவராமனுக்கு எலி மருந்து எப்படி கிடைத்தது? யாரிடம் இருந்து வாங்கினாா்? என காவல்துறை ஏன் இன்னும் விசாரணை செய்யவில்லை? காவல்துறை விசாரணை சரியான முறையில் நடத்தப்படவில்லை. இன்னும் எத்தனை நாள்களுக்கு காவல்துறை இந்த வழக்கை விசாரணை செய்யும் எனத் தெரியவில்லை. மந்தகதியில் விசாரணை நடைபெறுகிறது. என்சிசி ஆசிரியருக்கும் சிவராமனுக்கும் என்ன தொடா்பு? சிவராமனால் ஆசிரியருக்கு என்ன லாபம்? எந்த அடிப்படையில் என்சிசி முகாம் நடத்த தனியாா் பள்ளியில் அனுமதி வழங்கப்பட்டது?’ என பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப். 19-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...