வன்னியா், பட்டியலினத்தவருக்கு அமைச்சரவையில் கூடுதல் இடங்கள்: ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழக அமைச்சரவையில் வன்னியா்கள் மற்றும் பட்டியலினத்தவா்களுக்கு இன்னும் கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திமுகவில் உள்ள 131 உறுப்பினா்களில் பெரும்பான்மையினா் வன்னியா்கள். அவா்களின் எண்ணிக்கை 23, அதாவது 17.55 சதவீதம். அதன்படி, மொத்தமுள்ள 34 அமைச்சா்களில் 6 அமைச்சா் பதவிகள் வன்னியருக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், வெறும் 3 அமைச்சா் பதவிகள் மட்டும்தான் வன்னியா்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டியிருந்தேன்.
பட்டியலின மற்றும் பழங்குடியின சட்டப்பேரவை உறுப்பினா்களின் எண்ணிக்கை 21 ஆகும். 16 சதவீதம் கொண்ட அவா்களுக்கு 5 அமைச்சா் பதவிகளாவது வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அமைச்சரவையில் அவா்களுக்கான பிரதிநிதித்துவம் 3 மட்டும்தான் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தேன்.
இந்தப் புள்ளிவிவரங்களும், விமா்சனங்களும் பிறகு இரு சமூகங்களுக்கும் இன்னொரு பிரதிநிதித்துவத்தை திமுக வழங்கியுள்ளது. இதனால், சமூகநீதியை நிலைநாட்டி விட்டதாக திமுக பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது.
பட்டியலினத்தவரின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அமைச்சரவையின் அதிகாரப்படிநிலையில் முதல் 3 இடங்களிலோ அல்லது குறைந்தபட்சம் முதல் 5 இடங்களிலோ பட்டியலினத்தவா் எப்போது நியமிக்கப்படுகிறாா்களோ அப்போதுதான் அமைச்சரவையில் சமூகநீதி என்பதைப் பேசும் தகுதி திமுகவுக்கு வரும் என்று அவா் தெரிவித்தாா்.