அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சீறி வரும் காளைகள், அடக்க துடிக்கும் காளையர்கள் முழுவிவரம்!

உலகம் முழுவதும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி திங்கள்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சீறி வரும் காளைகள், அடக்க துடிக்கும் காளையர்கள் முழுவிவரம்!
Published on
Updated on
3 min read

உலகம் முழுவதும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி திங்கள்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். சீறி வரும் காளைகளை அடக்கி ஆளும் காளையர்கள் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டு போட்டியில் பங்கேற்றுள்ளனர். போட்டியின் முதல் சுற்றில் 50 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.   

போட்டியில் ஆயிரம் காளைகள் மற்றும் 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரர் தலா ஒரு கார் என 2 கார்கள் பரிசு வழங்கப்பட உள்ளது. போட்டி பாதுகாப்பாக 2000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

போட்டியில் கலந்துகொள்ள கூடிய காளைகளின் உரிமையாளர்கள் அதற்கான அனுமதிசீட்டுடன் தங்கள் காளைகளை பங்கேற்க வைத்து வருகின்றனர். காளைகள் களமிறங்கும் வாடிவாசல் பகுதியில் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பாதுகாப்பு கருதி தென்னை நார்கள் பரப்பபட்டுள்ளன. 

முத்துப்பட்டி சாலை சந்திப்பு தொடங்கி அவனியாபுரம் பேருந்துநிலையம் வரை வாடிவாசல், காளை சேகரிப்பு இடம், காளை மருத்துவபரிசோதனை பகுதி, காளைகள் அனுப்பும் பகுதி, பார்வையாளர்கள் பகுதி உள்ளிட்டவைகளுடன் இருபுறமும் பாதுகாப்பு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

போட்டியை பார்வையிடுவதற்காக மதுரை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். போட்டி பாதுகாப்பாக நடக்க மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில்  2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோன்று அவசரகால மருத்துவ தேவைக்காக மருத்துவக் குழுக்களும், கால்நடை மருத்துக் குழுக்களும், 108 அவசர ஆம்புலன்ஸ் ஊர்திகளும், காளைகளுக்கான தனி ஆம்புலன்ஸ்களும்,தீயணைப்புதுறை வாகனங்களும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.  

போட்டியில் காளைகளை அடக்கும் மாடுபிடிவீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு தங்கம்,வெள்ளி காசுகள்,மிக்சி, பேன், கிரைண்டர் ,குக்கர், கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுபொருள்கள் வழங்கப்படுகின்றன. 

ஒவ்வொரு சுற்றிலும் தலா 50 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்படுவர், ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்றாக போட்டி நடைபெற்று வருகிறது.ஒவ்வொரு சுற்றிலும் சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் இறுதி சுற்றில் பங்கேற்பர்.

போட்டியானது காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது. போட்டி நேரம் நீட்டிப்பு செய்வது தொடர்பாக போட்டியின் நிலையை பொறுத்து மாவட்ட ஆட்சியர் முடிவு எடுப்பார். இந்த ஆண்டு ஆள்மாறாட்ட முறைகேட்டை தடுக்கும் வகையில் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் க்யூஆர் கோடுடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று போட்டியில் கலந்து கொள்ளக்கூடிய மாடுபிடி வீரர்கள் மற்றும் காளையின்  உரிமையாளர்கள் போட்டியின் உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் மது அருந்திவிட்டு வந்தால் உடனடியாக போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் போட்டியின் போது ஏதேனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் போட்டியில் கலந்து கொள்ளக்கூடிய காளையின்  உரிமையாளர்கள் மூக்கணாங்கயிற்றை அவிழ்ப்பதற்காக கையில் கத்தியோ,அரிவாளோ எடுத்து வரக்கூடாது எனவும் காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு அவனியாபுரம் போட்டி நடைபெறக்கூடிய வில்லாபுரம் அவனியாபுரம் முத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட அரசு மதுபான கடை மற்றும் மன மகிழ் மன்றங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோன்று பாதுகாப்பு நலன் கருதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறக்கூடிய பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு அவனியாபுரம் மற்றும் திருப்பரங்குன்றம் சாலை, விமான நிலையத்திற்கு செல்லக்கூடிய சாலை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்பட உள்ளன

போட்டியின் போது பாதுகாப்புப் பணியில் ஈடுபடக்கூடிய காவல்துறையினர் உரிய பாதுகாப்பு கவசங்களை பொருத்தி பணியாற்ற வேண்டுமென மாநகர காவல் துறையை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

போட்டியை காண பல்லாயிரகணக்கான மக்கள் வந்திருந்தனர். அவர்கள் காளைகள் சீறிப்பாய்வதையும், சீறி வரும் காளைகளை வீரர்கள் அடக்கி அசத்தி வருவதை மெய்சிலிர்த்து பார்த்து வருகின்றனர். 

முதலாவது சுற்று: முதலாவது சுற்றில் மஞ்சல் நிற டீ சர்ட் அணிந்த வீரர்கள் 50 பேர் களமிறங்கினர். இதில் மஞ்சல் டீ சர்ட் எண் 32, தேனி சீலையம்பட்டி முத்துக்கிருஷ்ணன் 7 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். அவனியாபுரம் திருப்பதி 3 காளைகளை அடக்கி இரண்டாவது இடத்தையும், அவனியாபுரம் மணி 3 காளைகளை அடக்கி மூன்றாவது இடத்தை பிடித்தார்.

இரண்டாவது சுற்று: இரண்டாவது சுற்றில் பச்சை, இளம் பச்சை டீ சர்ட் அணிந்த வீரர்கள் களம் இறங்கினர். 9 மணியளவில் 2 ஆவது சுற்று நிறைவடைந்தது.

இரண்டாவது சுற்றில் மதுரை அவனியாபுரம் வீரர் கார்த்தி 14 காளைகளை அடக்கி முதலிடம் பெற்றுள்ளார். ரஞ்சித்குமார் 10 காளைகளை அடக்கி இரண்டாவது இடத்தையும், முதல் சுற்றில் 7 காளை அடக்கி முதலிடம் பிடித்த தேனி சீலையம்பட்டியை சேர்ந்த முத்துகிருஷ்ணன், 7 காளைகளை அடக்கி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். 

இரண்டாவது சுற்றில் 11 வீரர்களும், 17 காளைகளும் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. வில்லை முறைகேடு, மது போதை போன்ற காரணங்கள் இந்த தகுதி நீக்கம் செய்யப்பட்டன.

இரண்டாவது சுற்று முடிவில் 100 வீரர்கள் 100 வீரர்கள் களம் கண்டனர். 171 காளைகள் விடப்பட்டன.

மூன்றாவது சுற்று: மூன்றாவது சுற்றில் ஆரஞ்ச் டீ சர்ட் அணிந்த 50 வீரர்கள் களமிறங்கினர். திருச்சி பாலக்கரை சூரியா காளை களத்தில் இறங்கி அசத்தியது.

மூன்றாவது சுற்றில் மதுரை அவனியாபுரம் வீரர் கார்த்தி 13 காளைகளை அடக்கி முதலிடம் பெற்றுள்ளார். ரஞ்சித்குமார் 11 காளைகளை அடக்கி இரண்டாவது இடத்தையும், முத்துகிருஷ்ணன், 7 காளைகளை அடக்கி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். 

நான்காவது சுற்று: நான்காவது சுற்றில் பச்சை நிற டீ சர்ட் அணிந்து களமிறங்குகின்றனர், ஐந்தாவது சுற்றில் சிமென்ட் நிற டீ சர்ட் அணிந்து வீரர்கள் களமிறங்க உள்ளனர்.

நான்காவது சுற்றில் மதுரை அவனியாபுரம் வீரர் கார்த்தி 16 காளைகளை அடக்கி முதலிடம் பெற்றுள்ளார். ரஞ்சித்குமார் 14 காளைகளை அடக்கி இரண்டாவது இடத்தையும், முத்துகிருஷ்ணன் 7 காளைகளை அடக்கி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். 

ஐந்தாவது சுற்று: ஐந்தாவது சுற்றில் முதல் 3 இடத்தி் எந்தவித மாற்றமும் இன்றி மதுரை அவனியாபுரம் வீரர் கார்த்தி 15 காளைகளை அடக்கி முதலிடம் பெற்றுள்ளார். ரஞ்சித்குமார் 13 காளைகளை அடக்கி இரண்டாவது இடத்தையும், முத்துகிருஷ்ணன் 7 காளைகளை அடக்கி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். 
 

தொடர்ந்து முதலிடம் பிடித்து வரும் கார்த்தி 2022 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டியில் முதல் பரிசாக கார் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாலை 4 மணி வரை போட்டிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காயமடைந்தவர்கள் விபரம் 
மாடுபிடி வீரர்கள்: 5
மாட்டின் உரிமையாளர்கள் : 16
பார்வையாளர்கள் : 1
காவல்துறை : 1
மேல்சிகிச்சை: 6
தற்போது வரை மொத்தம் :சார்பு ஆய்வாளர் உள்பட  23 பேர் காயமடைந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com