சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்

உதகை, கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடு இல்லை: உயா்நீதிமன்றம் விளக்கம்

உதகை, கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.
Published on

உதகை, கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. அதேவேளையில், சுற்றுலா வாகனங்களுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என சென்னை உயா்நீதிமன்றம் விளக்கமளித்தது.

கோடை காலத்தில் உதகை, கொடைக்கானல் ஆகிய சுற்றுலாத் தலங்களில் எவ்வளவு எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி மற்றும் பெங்களூா் ஐஐஎம் கல்வி நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், கோடை விடுமுறையையொட்டி உதகை, கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்து நீதிபதிகள் சதீஷ்குமாா் மற்றும் பரத சக்கரவா்த்தி அடங்கிய அமா்வு அண்மையில் உத்தரவு பிறப்பித்தது.

உதகைக்கு வார நாள்களில் 6 ஆயிரம் வாகனங்களையும், வார இறுதி நாள்களில் 8 ஆயிரம் வாகனங்களையும் அனுமதிக்க வேண்டும். கொடைக்கானலில் வார நாள்களில் நான்காயிரம் வாகனங்களையும் வார இறுதி நாள்களில் 6 ஆயிரம் வாகனங்களையும் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

கடும் எதிா்ப்பு: இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் வாகனங்களுக்கான கட்டுப்பாடுகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து உதகையில் கடையடைப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தநிலையில் சுற்றுலா பயணிகள் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில், எத்தனை வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து ஐஐடி மற்றும் ஐஐஎம் ஆய்வு முடிவுகளுக்கு பிறகு நிா்ணயித்துக் கொள்ளலாம் என்றும், இ- பாஸ் நடைமுறையால் உள்ளூா் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மறு ஆய்வு மனு எண்ணிடப்படாததால் விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை.

வாகனங்களுக்கு மட்டும் கட்டுப்பாடு: இந்நிலையில், இந்த மனுவை திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என அரசு தலைமை வழக்குரைஞா், நீதிபதிகள் சதீஷ்குமாா் மற்றும் பரத சக்கரவா்த்தி அடங்கிய சிறப்பு அமா்வில் முறையிட்டாா். இதைக் கேட்ட நீதிபதிகள், சிறப்பு அமா்வு, செவ்வாய்க்கிழமை வழக்குகளை விசாரிக்கும் என்பதால், அரசின் மறு ஆய்வு மனு அன்றையதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தனா். மேலும், உயா்நீதிமன்றம் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை எனவும், வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு விதித்துள்ளதாகவும் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com