
ராமேசுவரத்தில் புதிய பாம்பன் ரயில் பாலத்தைத் திறந்து வைப்பதற்காக, ஹெலிகாப்டரில் சென்ற பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டரில் இருந்தே ராமர் பாலம் பகுதியை தரிசித்ததாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, பிரதமர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, இலங்கையில் இருந்து திரும்பி வரும் வழியில் ராமர் சேது தரிசனத்துடன் ஆசிர்வாதமும் கிடைத்தது. அயோத்தியில் சூரிய திலகம் நடந்த அதே நேரத்தில், ராமர் பாலத்தின் தரிசனமும் தற்செயலாக கிடைத்தது. இருவரின் தரிசனமும் பெறுவது பாக்கியமே. நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தியாக உள்ள ஸ்ரீராமரின் ஆசிர்வாதம், எப்போதும் நம் மீது நிலைத்திருக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கை சென்றிருந்த பிரதமர் மோடி, பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைப்பதற்காக, எம்ஐ 17 ரக ஹெலிகாப்டரில் மண்டபத்துக்கு வந்தடைந்தார்.
மண்டபத்தில் தரையிறங்கிய பிரதமர் மோடியை, ஆளுநர் ரவி, ராமநாதபுரம் ஆட்சியர், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், மத்திய இணையமைச்சர் எல். முருகன், நவாஸ்கனி எம்.பி., ஜி.கே. வாசன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வானதி ஸ்ரீனிவாசன், நயினார் நாகேந்திரன், சுதாகர் ரெட்டி, ஹெச். ராஜா தமிழிசை சௌந்தரராஜன், கருப்பு முருகானந்தம், சரத்குமார், அரவிந்த மேனன் ஆகியோர் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழர்களின் பாரம்பரிய உடையான பட்டு வேட்டி - சட்டையுடன் திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, ராமேசுவரம் - தாம்பரம் ரயில் போக்குவரத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதையும் படிக்க: மும்பை - நியூயார்க்: எங்கு வாழ்வது சிறந்தது? விளக்கத்துடன்!