கோவையில் பூப்பெய்திய மாணவியை பள்ளி வகுப்பறைக்கு வெளியே அமர்ந்து தேர்வெழுதச் சொன்ன விவகாரத்தில், பள்ளி முதல்வர் ஆனந்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் பள்ளியில் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் பள்ளி நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா, செங்குட்டைப்பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் சுவாமி சித்பவானந்த மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி சுருதிகா ஸ்ரீ, பூப்பெய்தியதால் வகுப்பறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும் அவரை வகுப்பறையின் வாயிலில் அமர்ந்து முழு ஆண்டுத் தேர்வு எழுதச் சொல்லியிருக்கின்றனர். இவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த திங்கள்கிழமை, நேற்று(புதன்கிழமை) என இரண்டு தேர்வுகளை வகுப்பறை வாயிலில் அமர்ந்து எழுதியுள்ள அவலம் அரங்கேறியுள்ளது.
இந்நிலையில் மாணவியைப் பார்ப்பதற்காக வந்த அவரது தாய் மற்றும் உறவினர் சென்று மாணவியிடம் இதுதொடர்பாக பேசி விடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த விடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த நிலையில் இன்று காலை முதல் மாவட்ட கல்வி உதவி இயக்குநர் உள்பட அதிகாரிகள் பள்ளியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே பள்ளி முதல்வர் ஆனந்தியை பணியிடை நீக்கம் செய்து பள்ளியின் தாளாளர் உத்தரவிட்டுள்ளார். விடியோவில் பேசிய மாணவி, பள்ளியின் முதல்வர்தான் இங்கு அமர்ந்து தேர்வெழுதச் சொன்னதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் மாணவியின் தாய், தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் மாணவியை தனியே அமர வைக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
தன் மகளை வகுப்பறைக்குள் அமர வைக்கவே கூறினேன், ஆனால் அவர்கள் வெளியே உட்கார வைத்துள்ளதாக பள்ளி முதல்வர் மீது குற்றம்சாட்டியுள்ளார்.