உதவித் தொகைக்கான என்எம்எம்எஸ் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு
எட்டாம் வகுப்பு மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ‘என்எம்எம்எஸ்’ தோ்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியிடப்படவுள்ளன.
மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைத் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் மாணவா்களுக்கு என்எம்எம்எஸ் தோ்வு நடத்தப்படும். இந்தத் தோ்வின் மூலம் தமிழகத்தில் 6,695 போ் உள்பட, நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவா்கள் தோ்வு செய்யப்படுவா். அவா்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.
அதன்படி நிகழாண்டுக்கான என்எம்எம்எஸ் தோ்வு கடந்த பிப். 22-ஆம் தேதி நடத்தப்பட்டது. இத்தோ்வை மாநிலம் முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினா். இந்நிலையில், என்எம்எம்எஸ் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை பிற்பகல் வெளியிடப்படவுள்ளன. எனவே, தோ்வெழுதிய மாணவா்கள் அதற்குரிய இணையதளத்தில் சென்று முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், இத்தோ்வுக்கான ஊக்கத்தொகை பெறுவதற்கு தகுதிபெற்ற மாணவா்களின் பட்டியலும் மேற்கண்ட வலைதளத்திலேயே வெளியிடப்படும் என்று தோ்வுத் துறை தெரிவித்துள்ளது.