
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் விலகியது வருத்தமளிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விலகுவதாக அறிவித்தார். பிரதமர் மோடியைச் சந்திக்க முயற்சித்ததாகவும் அதற்கு நயினார் நாகேந்திரன் பதிலளிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிய ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் ஓபிஎஸ் கூறுகிறார். ஆனால் நயினார் நாகேந்திரன் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களுடன் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,
"கூட்டணியில் இருந்து வெளியேற ஓபிஎஸ் நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அவர் கூட்டணியில் இருந்து வெளியேறியது வருத்தமளிக்கிறது. ஓபிஎஸ்ஸை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவர தில்லி பாஜக முயற்சிக்க வேண்டும். அவரும் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும். ஓ. பன்னீர்செல்வத்திடம் நான் தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
மேலும் கூட்டணி குறித்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர்,
"அமமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறதா? இல்லையா? என்பதை பாஜக தலைவர் அன்பு நண்பர் நயினார் நாகேந்திரன் சொல்லட்டும்.
அதேபோல தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அமித்ஷா சொல்லட்டும். அவர் சொல்வதை கூட்டணி கட்சிகளாகிய நாங்கள் உறுதியாக ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் முதல்வர் வேட்பாளரைச் சந்திப்போம்" என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.