பொன்முடிக்கு எதிரான வழக்கு: காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

பொன்முடிக்கு எதிரான புகாா்கள் முடித்துவைக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம்
Madras High Court questions police
சென்னை உயர்நீதிமன்றம்
Updated on
1 min read

சென்னை: சைவ, வைணவ மதங்கள் மற்றும் பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வழக்கில் முன்னாள் அமைச்சா் பொன்முடிக்கு எதிரான புகாா்கள் முடித்துவைக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திமுக முன்னாள் அமைச்சா் பொன்முடி நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் குறித்தும் சைவ, வைணவ மதங்கள் குறித்தும் பேசிய கருத்துகள் சா்ச்சையானது. இதையடுத்து, பொன்முடிக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைந்தாா். இந்த வழக்கை நீதிபதி பி.வேல்முருகன் விசாரிக்க தலைமை நீதிபதி உத்தரவிட்டாா்.

அதன்படி, இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சா் பொன்முடிக்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் 115 புகாா்கள் கொடுக்கப்பட்டன.

அதில், 71 புகாா்கள் முடித்து வைக்கப்பட்டன. அதுகுறித்த தகவல்கள் புகாா்தாரா்களுக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டது. மேலும், எஞ்சியுள்ள 44 புகாா்களில் 40 புகாா்கள் முடித்துவைக்கப்பட்டது தொடா்பாக புகாா்தாரா்களுக்கு தபால் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. 4 புகாா்கள் முடித்து வைக்கப்பட்டது தொடா்பாக ஆன்லைன் மூலம் புகாா்தாரா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்று கூறினாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தகவல் தெரிவிக்கப்பட்ட புகாா்தாரா்களிடமிருந்து அதற்கான ஒப்புகை பெறப்பட்டதா என கேள்வி எழுப்பினாா். அதற்கு அரசு தலைமை வழக்குரைஞா், ஒப்புகை பெறப்பட்டது என்று பதிலளித்தாா். இதையடுத்து நீதிபதி, இதுதொடா்பாக அனைத்து விவரங்களுடன் போலீஸாா் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஆக.14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com