2.24 கோடி பனை விதைகள் நடவு: தமிழக அரசு தகவல்

தமிழகம் முழுவதும் 2.24 கோடி பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஏரிக்கரையில்  பனை விதைகளை நடவு செய்யும் குழந்தைகள்.
ஏரிக்கரையில் பனை விதைகளை நடவு செய்யும் குழந்தைகள்.
Updated on

தமிழகம் முழுவதும் 2.24 கோடி பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் - வனத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் - வனத் துறை, பசுமை தமிழ்நாடு இயக்கம் இணைந்து தமிழகம் முழுவதும் பனை விதைகள் நடவு செய்யும் திட்டத்தை கடந்த செப். 16-ஆம் தேதி தொடங்கியது. இத்திட்டத்தின் வாயிலாக வெள்ளிக்கிழமை (டிச. 5) வரை மொத்தம் 2.24 கோடி பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

கடந்தாண்டு 46 லட்சம் பனை விதைகள் நடவு செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டு 6 மடங்கு அதிகமாக விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இதில், அதிகபட்சமாக திருச்சி, அரியலூா் ஆகிய மாவட்டங்களில் தலா 20 லட்சமும், சிவகங்கை, பெரம்பலூா் மாவட்டங்களில் தலா 18 லட்சமும், திருப்பத்தூா், புதுக்கோட்டை மாவட்டங்களில் தலா 10 லட்சமும் பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

சான்றிதழ் அளிப்பு: சா்வதேச தன்னாா்வலா்கள் தினத்தையொட்டி (டிச. 5) பனை விதைகள் நடவு செய்ய உறுதுணையாக இருந்த, இருக்கும் தன்னாா்வலா்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் அரசு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இதில், தன்னாா்வலா்கள் பனை விதைகள் நடவு செய்த இடங்களின் புகைப்படங்களை உதவி செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதன்மூலம், அரசு முத்திரை மற்றும் ‘க்யூ ஆா்’ குறியீட்டுடன் சான்றிதழ்களை செயலியின் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம். இதில், டிசம்பா் இறுதிக்குள் அனைவரும் விதைகளை நடவு செய்த புகைப்படங்களைச் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com