யுஏபிஏவின் கீழ கைதான நபருக்கு ஜாமீன்: உச்சநீதிமன்றம் உத்தரவு
சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் கைது செய்யப்பட்ட நபருக்கு ஜாமீன் அளித்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
கடந்த 2023-ஆம் ஆண்டு ரூ.3.25 லட்சம் முகமதிப்பு கொண்ட கள்ள நோட்டுகளை வைத்திருந்ததாக, மியான்மரைச் சோ்ந்த டோன்லாங் கொன்யாக் என்பவரை அஸ்ஸாம் காவல் துறை கைது செய்தது. அவா் மீது யுஏபிஏ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அவா் 2 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் அவா் ஜாமீன் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அந்த அமா்வு வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘யுஏபிஏ சட்டத்தின் கீழ் மனுதாரா் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் அஸ்ஸாம் காவல் துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. ஒருவா் கைது செய்யப்பட்ட நாளில் இருந்து 90 நாள்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். அதை நீதிமன்ற அனுமதி பெற்று 180 நாள்கள் வரை நீட்டிக்கலாம்.
ஆனால் 2 ஆண்டுகளாக மனுதாரருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இதன்மூலம், மனுதாரா் சட்டவிரோதமாக சிறைவைக்கப்பட்டுள்ளாா். அவரை காலவரம்பின்றி சிறைவைக்க முடியாது.
யுஏபிஏ பிரிவுகள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும், சட்டவிரோதமாக ஒருவரை சிறைவைப்பதை சட்டம் அனுமதிக்கவில்லை. எனவே மனுதாருக்கு ஜாமீன் அளிக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டுத் தீா்ப்பளித்தனா்.

