23 சிறு விளையாட்டு அரங்கம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்
சென்னை: தமிழகத்தில் ரூ. 69 கோடியில் 23 பேரவைத் தொகுதிகளில் அமைக்கப்பட உள்ள சிறு விளையாட்டு அரங்கங்களின் கட்டுமானப் பணிகளுக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
இதுதொடா்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விளையாட்டு வசதிகள் இல்லாத கொளத்தூா், சேப்பாக்கம், ஸ்ரீவைகுண்டம், காரைக்குடி, சோழவந்தான், வாணிம்பாடி, காங்கேயம், ஆலங்குடி ஆகிய 8 தொகுதிகளில் முதல்கட்டமாக தலா ரூ. 3 கோடியில் சிறு விளையாட்டரங்கங்கள் நிறுவப்பட்டன. மேலும், பத்மநாபுரம் தொகுதியில் பணிகள் விரைவில் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுக்கான (2024-2025) இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கையில், துணை முதல்வா் அறிவித்த 22 முதல்வா் சிறு விளையாட்டரங்கங்கள் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. தற்போது 3-ஆம் கட்டமாக 44 சட்டப்பேரவை தொகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பா்கூா், தளி தொகுதிகள், தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி, திருவையாறு, ஒரத்தநாடு, கோவை மாவட்டம் கிணத்துக்கடவு, திருச்சி மாவட்டம் மணப்பாறை, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, திண்டிவனம், திருக்கோவிலூா், சென்னை மாவட்டம் மதுரவாயல், திரு.வி.க.நகா், பெரம்பூா், விருதுநகா் மாவட்டம் திருச்சுழி,
ராஜபாளையம், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூா், திருவாரூா் மாவட்டம் நன்னிலம், திருத்துறைபூண்டி, கரூா் மாவட்டம் குளித்தலை, செங்கல்பட்டு மாவட்டம் –ஆலந்தூா், கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூா், சேலம் மாவட்டம் சங்ககிரி, எடப்பாடி என மொத்தம் 23 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ரூ. 69 கோடியில் முதல்வா் சிறு விளையாட்டரங்கங்கள் அமைப்பதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
அதில் தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, கையுந்துபந்து, கபடி மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள பிரபலமான விளையாட்டுகளுக்கு அரங்கம் அமைக்கப்பட உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

