

புதுச்சேரி நடைபெறும் தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி துறைமுக மைதானத்தில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் இன்று (டிச.9) நடைபெற உள்ளது. கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து முதல்முறையாக விஜய் கலந்துகொள்ளும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி என்பதால், அதிகளவில் கூட்டம் கூடாத வகையில், க்யூஆர் கோடுகளுடன் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதையொட்டி கூட்டம் நடைபெறவுள்ள இடத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாஸ் உள்ளவர்கள் மட்டும் உள்ளே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று காலை பிரதான நுழைவு வாயிலை கடந்து வெள்ளை சட்டை அணிந்த நபர் உள்ளே சென்றார். கூட்டம் நடைபெறவுள்ள இடத்தில் போலீசார் உள்ளே வரும் அனைவரையும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனையிட்டபோது, அவரது இடுப்புப் பகுதியில் இருந்து சப்தம் கேட்டுள்ளது.
அவரை சோதனையிட்ட போலீஸார், அவரது இடுப்பில் கைத்துப்பாக்கி வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை தனிமைப்படுத்திய காவல் துறை அதிகாரிகள், கூட்டம் நடைபெறும் இடத்தில் இருந்து வெளியே அழைத்து வந்தனர்.
கைத்துப்பாக்கிக்கான உரிமம் உள்ளிட்டவை குறித்தும், பொதுக் கூட்டத்துக்கு ஏன் துப்பாக்கி எடுத்து வந்தீர்கள் என்பது குறித்து மூத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் விசாரணை நடத்தினர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த டேவிட் என்பதும், மத்திய ரிசர்வ் படையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்தது. சிவகங்கை மாவட்ட கிழக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் பிரபுவின் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலராக அவர் பணியில் உள்ளார்.
டாக்டர் பிரபுவின் பாதுகாப்புக்கு, அரசு அனுமதியுடன் 2 பேர் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர்தான் டேவிட் என்பதும், பிரபு புதுச்சேரி பொதுக் கூட்டத்துக்கு வந்ததால் அவரின் பாதுகாப்புக்காக உடன் வந்தததும் தெரியவந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.