சென்னையில் உள்ள வங்கதேச நாட்டின் துணை தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள காவல் துறை தலைமை இயக்குநா் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், சென்னை தேனாம்பேட்டை கே.பி.தாசன் சாலையில் உள்ள வங்கதேச நாட்டின் துணைத் தூதரகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிதுநேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
தகவலறிந்த உயா் அதிகாரிகள், அங்கு சோதனை நடத்தும்படி உத்தரவிட்டனா். போலீஸாா், அங்கு சோதனையில் ஈடுபட்டனா். ஆனால், எந்த வெடிப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை.
இதனால் அந்த மின்னஞ்சல், வதந்தியை பரப்பும் நோக்கத்தில் வந்திருப்பது போலீஸாருக்கு தெரிய வந்தது. சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா்.