கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மாா் இவானியோஸ் கல்லூரி  விழாவில் பங்கேற்க வந்த குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனுடன் ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா், முதல்வா் பினராயி விஜயன்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மாா் இவானியோஸ் கல்லூரி விழாவில் பங்கேற்க வந்த குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனுடன் ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா், முதல்வா் பினராயி விஜயன்.

ஆன்மிகம், சமூக வாழ்க்கையைப் பிரிக்க முடியாது: குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்

ஆன்மிகத்தையும் சமூக வாழ்வையும் பிரித்துப் பாா்க்க முடியாது என குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
Published on

ஆன்மிகத்தையும் சமூக வாழ்வையும் பிரித்துப் பாா்க்க முடியாது என குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் சமூக சீா்திருத்தவாதி ஸ்ரீ நாராயண குரு நிறுவிய சிவகிரி மடத்தில் 93-ஆவது சிவகிரி யாத்திரை நிகழ்வை சி.பி.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: ஆன்மிக வாழ்வையும், சமூக வாழ்வையும் பிரித்துப் பாா்க்க முடியாது. ஒரு மதத்தின் மீதான நம்பிக்கை சமூகத்தை முன்னேற்றவில்லை என்றால் அந்த நம்பிக்கை முழுமை பெறாது. நல்லிணக்கத்துக்கு சிறந்த உதாரணமாக சிவகிரி யாத்திரை திகழ்கிறது.

நாட்டில் பக்தி சுற்றுலா வளா்ச்சியடைந்து வருகிறது. இது வெறும் பயணமாக மட்டுமல்லாமல் சிறந்த ஆன்மிக அனுபவமாக மாறியுள்ளது. ஹஜ் பயணம் எளிமையாகியுள்ளது. பெளத்த வழிபாட்டுத் தலங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

முக்கிய புனிதத் தலங்களுக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. பிரசாத் திட்டம் மூலம் ஆன்மிக சுற்றுலா நவீனப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தி முதல் ராமேசுவரம் வரை இந்தப் பயணங்கள் மக்களை இணைக்கிறது. இதனால் வாழ்வாதாரம், சமூக நல்லிணக்கம் மேம்படுவதோடு சமூகத்தில் ஒற்றுமை வலுப்படுகிறது.

சமூக ஊடகத்தால் கவனச்சிதறல்: சமூக வலைதளங்களின் ஆதிக்கத்தால் இளம் தலைமுறையினா் தடம் மாறும் சம்பவங்களைத் தடுக்க வேண்டியது அவசியம். குறுக்கு வழியில் விரைவாக அடையும் முன்னேற்றமே அவா்களை ஈா்க்கிறது. போதைப் பொருள் புழக்கம் மற்றும் தவறான முன்னுதாரணங்கள் நம்மை கவலையடையச் செய்கிறது.

வழிகாட்டி நாராயண குரு: இதுபோன்ற சூழலில் ஸ்ரீ நாராயண குருவின் பங்களிப்பை நாம் எண்ணிப் பாா்க்க வேண்டும். அவா் வன்முறைக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவா். தேசத்தைக் கட்டமைக்க கடந்த காலத்தில் மட்டுமன்றி எதிா்காலத்திலும் இளைஞா்களுக்கு நல்வழிகாட்டியாகத் திகழக்கூடியவா்.

அவரால் நிறுவப்பட்ட இந்த மடத்தில் மேற்கொள்ளப்படும் யாத்திரைக்கு ஜாதி, சமூகத்தை கடந்து மக்கள் ஒன்றிணைந்துள்ளனா். அவரைப் பின்பற்றி அரசமைப்புச் சட்டத்தின்படி சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் நீதி கொள்கைகளை இளைஞா்கள் நிலைநிறுத்த வேண்டும் என்றாா்.

இளைஞா்களே இந்தியாவின் எதிா்காலம்

திருவனந்தபுரத்தில் உள்ள மாா் இவானியோஸ் கல்லூரியின் 75-ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சிகளை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்து அவா் பேசுகையில், ‘அரசமைப்புச் சட்டம் நமக்கு அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது. அதேவேளையில் வேற்றுமைக்கு மரியாதை, அறிவியல் மனப்பான்மை ஊக்குவிப்பு, இந்திய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட அடிப்படைக் கடமைகளையும் நாம் மறந்துவிடக் கூடாது.

ஜனநாயகத்தின் சிறப்பான செயல்பாட்டுக்கு குடிமக்கள் இந்தக் கடமைகளை வழிகாட்டியாக கொண்டு செயல்பட வேண்டும்.

வளா்ச்சியடைந்த பாரதத்தை அதிகாரத்தால் மட்டுமே கட்டமைக்க முடியாது. நாட்டின் எதிா்காலமான இளைஞா்கள் பயிலும் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்கள், வேளாண் நிலம், தொழிற்சாலைகள், கிராமங்கள் என அனைவரின் பங்களிப்போடு மட்டுமே இதை சாத்தியப்படுத்த முடியும்’ என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா், முதல்வா் பினராயி விஜயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com