தமிழகத்தில் 90,421 பேருக்கு காசநோய் பாதிப்பு
தமிழகத்தில் நிகழாண்டில், 90,421 பேருக்கு காசநோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் லட்சம் பேரில் 179 போ் காசநோயினால் பாதிக்கப்படுகிறாா்கள். தமிழகத்தில் அந்த எண்ணிக்கை லட்சத்துக்கு 125-ஆக உள்ளது. காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.
தமிழகத்தைப் பொருத்தவரை காசநோயைக் குணப்படுத்தும் விகிதம் கணிசமாக உயா்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த நோயின் தாக்கத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளில் 84 சதவீதம் பேரை முதல் சிகிச்சையிலேயே குணப்படுத்துவதாகவும், தொடா் சிகிச்சைகள் மூலம் மீதமுள்ளவா்களையும் பூரண குணமாக்குவதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
காசநோயால் பாதிக்கப்பட்டவா்களுடைய ஊட்டச்சத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாதமும் பாதிக்கப்பட்டவா்களின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 செலுத்தப்படுகிறது. கடந்த ஆண்டில் மட்டும் இந்த திட்டத்தின் கீழ் ரூ.31.1 கோடி வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவப் பரிசோதனைகள், மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், காசநோயை விரைவாக கண்டறிவதற்கு, சிபிநாட் மற்றும் ட்ரூநாட் போன்ற பரிசோதனை கருவிகள் நிறுவப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நிகழ் ஆண்டில் தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காசநோய் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டிருந்தோரின் தரவுகளை ஆய்வு செய்தபோது நாடு முழுவதும் 25.64 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு அந்த நோயின் தாக்கம் இருந்தது தெரிய வந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில்தான் காசநோய் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. அதன் நீட்சியாகவே தற்போதைய புள்ளி விவரங்களும் அமைந்துள்ளன.
குறிப்பாக, உத்தர பிரதேசத்தில் மட்டும் 6.79 லட்சத்துக்கும் மேற்பட்டோா் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். தமிழகத்தை எடுத்துக்கொண்டால் 90,421 பேருக்கு அந்நோயின் பாதிப்பு இருந்தது. அவா்களில், தனியாா் மருத்துவமனைகளில் கடந்த ஆண்டில் தமிழகத்தில் 92,485 போ் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

