ஆளுநர்தான் பொறுப்பேற்க வேண்டும்: திமுக கூட்டணிக் கட்சிகள்!

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து தமிழக சட்டப்பேரவையில் விவாதம்...
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிதான் பொறுப்பேற்க வேண்டும் என்று திமுக கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்த வெளிநபர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் என்பவர் சம்பவத்தின்போது தொலைபேசியில் யாரிடமோ பேசினார் என்று பாதிக்கப்பட்ட மாணவி புகாரில் தெரிவித்திருந்தார்.

மேலும், இந்த விவகாரத்தில் அரசை கண்டித்து அரசியல் கட்சிகள் நடத்திய போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் அதிமுக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், பாமக உள்ளிட்ட கட்சிகள் கொண்டு வந்த கவனஈர்ப்பு தீர்மானத்தை தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக விவகாரம் இன்று விவாதிக்கப்பட்டது.

தமிழக வாழ்வுரிமை கட்சியில் எம்எல்ஏ வேல்முருகன் பேசுகையில், “பெண்ணின் விவரங்கள் வெளியானதற்கு வேந்தரான ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தகவல்கள், மத்திய அரசின் பொறுப்பில் உள்ள தளத்தில் இருந்து வெளியாகியுள்ளன.

கைதான ஞானசேகரன் யாரிடம் பேசினார் என்பதை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும்” எனத் தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்கள் ஆளுநரின் பொறுப்பில் உள்ளதால், வேந்தரான ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும் என்று விசிக உறுப்பினர் சதன் திருமலைகுமார் விவாதத்தின்போது பேசினார்.

மேலும், யார் அந்த சார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்றும், அந்த சார் ஆளுநராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எம்எல்ஏ ஈஸ்வரன் பேசினார்.

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தொழில்நுட்பக் கோளாறால் முதல் தகவல் அறிக்கை வெளியானது ஏற்க முடியாதது. தேசிய தகவல் மையத்தையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் எம்எல்ஏ நாகை மாலி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com