ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பாஜக புறக்கணிப்பு

அதிமுக, தேமுதிகவைத் தொடர்ந்து பாஜகவும் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
அண்ணாமலை(கோப்புப்படம்)
அண்ணாமலை(கோப்புப்படம்)
Published on
Updated on
2 min read

அதிமுக, தேமுதிகவைத் தொடர்ந்து பாஜகவும் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச. 14 ஆம் தேதி காலமானார்.

இதையடுத்து அத்தொகுதிக்கு பிப்ரவரி 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிஸ் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த முறை திமுக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

அரசியலமைப்பை அவமதித்துவிட்டார் முதல்வர்: ஆளுநர் மாளிகை

அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்த நிலையில் நாதக கட்சி போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

பாஜக தனது நிலைப்பாட்டை அறிவிக்காமல் இருந்து வந்தது. இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடைபெற்றது. இந்த நிலையில் அதிமுக, தேமுதிகவைத் தொடர்ந்து பாஜகவும் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பாஜக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியைப் பார்த்து வருகிறோம். எல்லா துறைகளிலும் ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, வேலைவாய்ப்பின்மை, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் என யாருக்குமே பாதுகாப்பின்மை என, தமிழகம் ஒரு இருண்ட காலத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

சட்டமேதை அம்பேத்கர் நமக்கு வழங்கிய அரசியல் சாசன சட்டத்திற்கு நேர் எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது திமுக அரசு. இந்த ஆட்சியின் அவலங்களைத் தினந்தோறும் சகித்துக் கொண்டுள்ள மக்கள், இது திராவிட மாடல் இல்லை, Disaster மாடல் என்று உரக்கச் சொல்லத் துவங்கிவிட்டனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை, நடைபெறவிருப்பது, இடைத் தேர்தலுக்கான இடைத் தேர்தல். கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலின்போது, பொதுமக்களைப் பட்டியில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தியதைப் பார்த்தோம். ஆளுங்கட்சி என்ற அதிகார மமதையில், திமுக, தேர்தல் விதிமுறைகளை எல்லாம் மீறிச் செயல்பட்டதை நாம் அனைவருமே எதிர்கொண்டோம்.

வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், திமுகவை முழுமையாக அகற்றவிருக்கும் தேர்தல். அந்த இலக்கை நோக்கியே, தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் நடுவே, இடைத்தேர்தலில் மீண்டும் கால்நடைகளைப் போலப் பொதுமக்களை அடைத்து வைக்க திமுகவை அனுமதிக்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி விரும்பவில்லை.

மக்கள் நலன் விரும்பும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் நன்கு கலந்தாலோசித்த பிறகு, ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை, தேசிய ஜனநாயகக் கூட்டணி புறக்கணிப்பதாக முடிவெடுத்துள்ளோம். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவை அகற்றி, மக்களுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நல்லாட்சியை வழங்குவதே எங்கள் இலக்கு. நன்றி. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக நிச்சயம் போட்டியிடும் என அண்ணாமலை அறிவித்த நிலையில் தற்போது அக்கட்சி தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்கியுள்ளது.

அதிமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்ததால் திமுக, நாதக இடையே நேரடி போட்டி உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com