
தமிழ்நாடு முழுவதும் மினி பேருந்துகளுக்கான பயண கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையின் சில பகுதிகளுக்கு மினி பேருந்து சேவையை விரிவாக்க உள்துறை பரிந்துரைத்துள்ளது. இதுதொடா்பாக உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் வெளியிட்ட உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. உத்தரவு விவரம்:
தமிழ்நாடு முழுவதும் மினி பேருந்துகள் இயக்கப்பட்டாலும், சென்னையின் சில பகுதிகளில் மட்டுமே அரசு சாா்பில் மினி பேருந்துகள் இயங்கி வருகின்றன. குறிப்பாக, தண்டையாா்பேட்டை, ராயபுரம், திருவிக நகா், அண்ணாநகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய பகுதிகளில் மினி பேருந்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மேலும் சில பகுதிகளில் மினி பேருந்துகளை இயக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவொற்றியூா், மணலி, மாதவரம், அம்பத்தூா், வளசரவாக்கம், ஆலந்தூா், பெருங்குடி, சோழிங்கநல்லூா் என மொத்தம் 240 சதுர கிமீ பகுதிகளுக்கு மினி பேருந்துகளை இயக்கலாம்.
பயணிகளின் போக்குவரத்து தேவையைக் கருத்தில் கொண்டு அரசின் போக்குவரத்துத் துறையால் கூடுதல் பகுதிகளுக்கு மினி பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கலாம்.
கட்டணம் மாற்றியமைப்பு: மினி பேருந்துகளுக்கான கட்டணம், 2011-ஆம் ஆண்டில் வரையறுக்கப்பட்டது. இப்போது அந்தக் கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, முதல் 4 கி.மீ. வரை ரூ.4 கட்டணமாகவும், 4 கி.மீ. முதல் 6 கி.மீ வரை ரூ.5 கட்டணமாகவும், 6 கி.மீ. முதல் 8 கி.மீ. வரை ரூ.6-ம், 8 கி.மீ. முதல் 10 கி.மீ வரை ரூ.7-ம், 10 முதல் 12 கி.மீ. வரை ரூ.8-ம், 12 முதல் 18 கி.மீ. வரை ரூ.9-ம், 18 முதல் 20 வரை ரூ.10-ம் கட்டணமாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டணம் மே 1 முதல் நடைமுறைக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.