
புதிய தொழில்நுட்பத்தின் கீழ் ரூ.580 கோடி பொருள்செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் ரயில் பாலம் பிப்ரவரியில் திறக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று தூக்குப் பாலத்தின் வழியே கப்பல்கள் இயக்கப்பட்டு, பாலத்தை இயக்கி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.
புதிய பாம்பன் ரயில் பாலம் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவிருப்பதால், மேடை அமைத்து, திறப்பு விழாவுக்கான ஒத்திகையும் நடத்தப்படுவதால், விரைவில் பாலம் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ராமேஸ்வரத்துக்கு ரயில் சேவை நிறுத்தப்பட்ட நிலையில், இன்று சோதனை ஓட்டமாக ரயில்கள் புதிய பாம்பன் பாலம் வழியாக இயக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு கன்னியாகுமரி - ராமேஸ்வரம் விரைவு ரயில் பெட்டிகள் காலியாக மண்டபம் ரயில் நிலையத்துக்கு வந்தது. ரயில் பெட்டிகள் அனைத்தும் பூட்டியிருந்தது. அப்படியே அவை ராமேஸ்வரம் ரயில் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன.
பிறகு சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் சேது விரைவு ரயில் பெடடிகள் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து 6 மணிக்குப் புறப்பட்ட ரயில் ராமேஸ்வரத்தை 6,25க்கு வந்தடைந்தது. அவை புதிய பாலம் வழியாக இயக்கப்பட்டு சோதிக்கப்பட்டது.
இதையும் படிக்க.. யாருக்கு வருமான வரிச் சலுகை? பிரதமர் மோடி சூசகமாக சொன்னது!
இந்த நிலையில், பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது வாரத்தில், பாம்பன் பாலம் திறப்பு விழா நடைபெறலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய பாலத்தில், பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து ரயில் இயக்கப்படவிருக்கிறது. இதுவரை பாம்பன் பாலம் திறக்கப்படும் தேதி உறுதி செய்யப்படவில்லை. பிரதமர் மோடி பங்கேற்பதால், மேடை அமைத்து துவக்க விழா ஒத்திகை பார்க்கப்படுகிறது.