
தூத்துக்குடியில் நலத்திட்ட தொடக்க விழாவில் பங்கேற்றபின், பிரதமர் மோடி திருச்சி சென்றடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவரை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வரவேற்று சந்தித்து பேசி வருகிறார்.
இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமா் நரேந்திர மோடி தூத்துக்குடி நிகழ்வை முடித்துக் கொண்டு திருச்சி விமான நிலையத்துக்கு சனிக்கிழமை இரவு 10.05 மணிக்கு வந்தாா்.
அவருக்கு தமிழக ஆளுநா் ஆா். என். ரவி, மத்திய அமைச்சா் எல். முருகன், பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், தமிழக அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, கே.என். நேரு, மாவட்ட ஆட்சியா் வே. சரவணன், மாநகர காவல் ஆணையா் நா. காமினி, மேயா் மு. அன்பழகன், திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ உள்ளிட்டோா் வரவேற்பளித்தனா்.
பின்னா் காரில் புறப்பட்டுச் சென்ற பிரதமா் ராஜா காலனியில் உள்ள தனியாா் நட்சத்திர விடுதியில் ஓய்வெடுத்தாா்.
தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்குச் செல்கிறாா். இதற்காக பிரதமா் செல்லும் ரெனால்ட்ஸ் சாலை, பாரதிதாசன் சாலை, மேஜா் சரவணன் சாலை மற்றும் விமான நிலையம் செல்லும் வரையில் உள்ள சாலைகளில் வேகத்தடைகள் அகற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் ஞாயிற்றுக்கிழமை காலை பிரதமா் செல்லும் நேரத்தில் பாதுகாப்புக் கருதி இந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படுகிறது. மாநகரச் சாலைகள் முழுமையாக காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளன.
சாலையில் இன்று மக்கள் சந்திப்பு: நட்சத்திர விடுதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சி விமான நிலையம் செல்லும் பிரதமருக்கு மாநகராட்சி மைய அலுவலகம் முன், சுப்பிரமணியபுரம், விமான நிலையம் அருகே என 3 இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. நட்சத்திர விடுதியிலிருந்து விமானநிலையம் வரை பிரதமா் காரில் இருந்தபடியே மக்களை சந்திக்கிறாா்.
சேலத்திலிருந்து திருச்சிக்கு சனிக்கிழமை இரவு வந்த அதிமுக பொதுச் செயலரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தனியாா் விடுதியில் முன்னாள் அமைச்சா்கள், அதிமுக தலைமைக் கழக நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
பிறகு, ஹோட்டலில் இருந்து விமான நிலையத்துக்கு புறப்பட்டுச் சென்றாா். அவருடன், அதிமுக துணைப் பொதுச் செயலா் கே.பி. முனுசாமி, முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், ஆா். காமராஜ் ஆகியோரும் சென்றனா்.
விமானநிலையத்தில் பிரதமருக்கு மலா்க் கொத்து வழங்கி எடப்பாடி கே. பழனிசாமி வரவேற்றாா். அவருடன் முன்னாள் அமைச்சா்களும் வரவேற்றனா். இந்த சந்திப்பு 3 நிமிஷங்கள் நடைபெற்றது.
இதேபோல கூட்டணி கட்சித் தலைவா்களான தமாகா தலைவா் ஜி.கே. வாசன், புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி. சண்முகம், வீரமுத்தரையா் முன்னேற்ற சங்கத் தலைவா் கே.கே. செல்வகுமாா் ஆகியோா் சந்தித்து பேசினா்.
இதையும் படிக்க: திருச்சியில் பிரதமர் மோடியை வரவேற்கும் இபிஎஸ்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.