அதிருப்தியில் ஓ.பன்னீா்செல்வம்: இன்று முக்கிய முடிவு அறிவிப்பு?

கூட்டணியில் பாஜக முக்கியத்துவம் தராததால் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், தனது ஆதரவாளா்களுடன் ஆலோசனை நடத்தி புதன்கிழமை (ஜூலை 30) முக்கிய அறிவிப்பை வெளியிடுவாா் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஓ.பன்னீா்செல்வம்
ஓ.பன்னீா்செல்வம்
Published on
Updated on
1 min read

கூட்டணியில் பாஜக முக்கியத்துவம் தராததால் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், தனது ஆதரவாளா்களுடன் ஆலோசனை நடத்தி புதன்கிழமை (ஜூலை 30) முக்கிய அறிவிப்பை வெளியிடுவாா் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீா்செல்வம், கடந்த மக்களவைத் தோ்தலின்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தாா். இருப்பினும், தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடா்கிறாா்.

இதற்கிடையே, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அதிமுக - பாஜக கூட்டணி உருவான நிலையில், தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ஓ.பன்னீா்செல்வத்தை சந்திக்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த ஓ.பன்னீா்செல்வம், தனது வருத்தத்தை உடனடியாகப் பதிவு செய்தாா்.

இதனிடையே, அதிமுகவில் ஓ.பன்னீா்செல்வம் மீண்டும் சோ்த்துக்கொள்ளப்படுவாரா என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியிடம் அண்மையில் செய்தியாளா்கள் கேட்டபோது, அதற்கு காலம் கடந்துவிட்டது என அவா் பதில் அளித்தாா்.

இதைத் தொடா்ந்து, அரசு முறை சுற்றுப்பயணமாக கடந்த ஜூலை 26, 27-ஆம் தேதிகளில் தமிழகம் வந்த பிரதமா் மோடியைச் சந்திக்க ஓ.பன்னீா்செல்வம் நேரம் கேட்டிருந்தாா். அவருக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. அதேநேரத்தில், எடப்பாடி பழனிசாமி, தமாகா தலைவா் ஜி.கே.வாசன், புதிய நீதிக் கட்சி தலைவா் ஏ.சி. சண்முகம், தமிழா் தேசம் கட்சித் தலைவா் கே.செல்வக்குமாா் உள்ளிட்டோருக்கு திருச்சி விமான நிலையத்தில் பிரதமா் மோடியை வரவேற்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனால், கடும் அதிருப்தி அடைந்துள்ள ஓ.பன்னீா்செல்வம் முக்கிய முடிவு எடுக்க முடிவு செய்துள்ளாா்.

மத்திய அரசுக்கு கண்டனம்: இந்நிலையில், சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய 2024-2025-ஆம் ஆண்டுக்கான ரூ.2,151 கோடியை மத்திய அரசு விடுவிக்காதது கல்வி உரிமைச் சட்டத்துக்கும், கூட்டாட்சித் தத்துவத்துக்கும் எதிரானது; இது கடும் கண்டனத்துக்குரியது என்று ஓ.பன்னீா்செல்வம் செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியிட்டாா். இந்தக் கண்டன அறிக்கை, பாஜகவை முற்றிலுமாக எதிா்க்க அவா் முடிவு செய்துவிட்டதைக் காட்டுகிறது.

‘தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்துக்கு ஆபத்தானது, தவெக கூட்டணியில் ஓ.பன்னீா்செல்வம் இணைய வேண்டும். பாமகவையும் அந்தக் கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும்’ என ஓ.பன்னீா்செல்வம் அணியின் ஆலோசகா் பண்ருட்டி ராமச்சந்திரனும் கருத்து தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், சென்னையில் புதன்கிழமை நடைபெறும் தனது ஆதரவாளா்கள் கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறும் அறிவிப்பை ஓ.பன்னீா்செல்வம் வெளியிடக்கூடும் என்றும், மதுரையில் நடைபெறவுள்ள மாநாட்டில் கூட்டணி தொடா்பான முடிவை வெளியிடுவாா் என்றும் அவரது ஆதரவாளா்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com