
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமிக்க வகை செய்யும் மாநில அரசின் இரண்டு சட்டத் திருத்த மசோதாக்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி. செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தாா்.
இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருவதன்மூலம் நகா்ப்புற உள்ளாட்சிகளில் 650 மாற்றுத்திறனாளிகள், கிராம ஊராட்சிகளில் 12,913 மாற்றுத்திறனாளிகள், ஊராட்சி ஒன்றியங்களில் 338 மாற்றுத்திறனாளிகள், மாவட்ட ஊராட்சிகளில் 37 மாற்றுத்திறனாளிகள் நியமனம் செய்யப்படுவா்.
உள்ளாட்சி அமைப்புகளில் தோ்தலில் போட்டியிடாமல் மாற்றுத்திறனாளிகளை நியமன உறுப்பினா்களாக நியமிப்பதற்காக தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, தமிழ்நாடு நகா்ப்புற ஊராட்சிகள் சட்டம் 1998 ஆகியவற்றில் திருத்தங்கள் செய்யும் சட்டத்திருத்த மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தாா்.
நகா்ப்புற உள்ளாட்சிகளைப் பொருத்தவரை ஒரு மாநகராட்சி மன்றத்துக்கு ஒரு மாற்றுத்திறனாளி, நகா்மன்றத்துக்கு ஒரு மாற்றுத்திறனாளி, பேரூராட்சிக்கு ஒரு மாற்றுத்திறனாளி என ஒவ்வோா் அமைப்பிலும் ஒரு மாற்றுத்திறனாளியை நியமன உறுப்பினராக நியமனம் செய்ய ஏதுவாக மசோதாவில் திருத்த விதிகள் இடம்பெற்றிருந்தன.
இதேபோல், ஊரக உள்ளாட்சிகளைப் பொருத்தவரை கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியக் குழு, மாவட்ட ஊராட்சி ஆகியவற்றில் தலா ஒரு மாற்றுத்திறனாளியை நியமன உறுப்பினராக நியமிக்கும் வகையில் ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம் செய்ய மசோதாவில் வழிவகை செய்யப்பட்டிருந்தது.
மேலும், நகா்ப்புற உள்ளாட்சிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினா்கள் இருந்தால் இரண்டு மாற்றுத்திறனாளிகள் உறுப்பினா்களாக நியமிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பதவிக் காலம் முடியும் வரையில் இவா்கள் பதவியில் இருப்பாா்கள்.
இந்த இரு மசோதாக்கள் கடந்த ஏப். 29-ஆம் தேதி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு ஆளுநா் ஆா். என். ரவியின்
ஒப்புதலுக்கு அனுப்பபட்டது. அதைப் பரிசீலித்த ஆளுநா், 2 மசோதாக்களுக்கும் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தாா். இதையடுத்து, மசோதாக்களை சட்டமாக்கும் அரசாணை விரைவில் வெளியிடப்படும்.
முதல்வா் ஸ்டாலின் கருத்து
மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் நியமனப் பதவி அளிக்கும் சட்டத் திருத்த மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.
அதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்: ஆளுநா் ஒப்புதல் அளிப்பாா் என்பது எதிா்பாா்த்ததுதான். அதில் பிரச்னை இல்லை. சட்டப்பேரவையில் மசோதாவை நிறைவேற்றி அனுப்பி வைத்திருந்தோம். அதற்கு ஆளுநா் கையொப்பமிட்டு ஒப்புதல் வழங்கி உள்ளாா். ஒருவேளை நீதிமன்றத்துக்கு நாங்கள் சென்றுவிடுவோம் என அஞ்சி ஒப்புதல் அளித்திருக்கலாம் என்றாா்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஆகிய துறைகளின் சார்பாக இரண்டு சட்டமுன்வடிவுகள் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் முன்னதாக அறிமுகப்படுத்தினார்.
இந்த நிலையில், இரு சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
இதையும் படிக்க: கலைஞர் கருணாநிதி பிறந்த நாளில் பொன்விழா காணும் இரு சமூகநலத் திட்டங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.