திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

குருமூர்த்தி, சைதை துரைசாமியுடனான சந்திப்பு நட்பு ரீதியிலானது: ராமதாஸ்

எஸ்.குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோருடனான சந்திப்பு நட்பு ரீதியிலானது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

News image
Updated On :7 ஜூன் 2025, 11:45 am IST

பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி, சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோருடனான சந்திப்பு நட்பு ரீதியிலானது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்திலுள்ள தனது இல்லத்திலிருந்து கார் மூலம் சென்னைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் சனிக்கிழமை காலை (ஜூன் 7) புறப்பட்டுச் சென்றார்.

அதற்கு முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில், மருத்துவப் பரிசோதனைக்காக சென்னைக்கு செல்லவில்லை. நான் நலமாக உள்ளேன். குடும்பத்தினரைச் சந்திப்பதற்காக சென்னை செல்கிறேன்.

ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் என்னை சந்தித்து பேசிவிட்டுச் சென்றனர். அது நட்பு ரீதியிலான சந்திப்பாகும். அவர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

குருமூர்த்தியுடனான எனது நட்பு நீண்டநாள் நட்பாகும். அவரை நான் மிகவும் மதிக்கிறேன். அதேபோன்று, சைதை துரைசாமியுடனும் எனக்கு நீண்டநாள் நட்பு உண்டு.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வந்து சந்தித்து பேசினார். சென்னையிலிருந்து திங்கள்கிழமை தைலாபுரம் வருகிறேன். செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்து பேசுகிறேன் என்றார் ராமதாஸ்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், கட்சித் தலைவர் பொறுப்பை தானே ஏற்றுக் கொள்வதாகவும், தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக இருப்பார் என்றும் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இதைத் தொடர்ந்து ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.

கட்சிக்கு புதிய மாவட்டச் செயலர்களை ராமதாஸ் நியமித்து வரும்நிலையில், ஏற்கெனவே அந்த பொறுப்பில் இருப்பவர்கள் பதவியில் தொடர்வார்கள் என அன்புமணி ராமதாஸ் கூறி வருகிறார். இந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்துக்கு வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது தந்தை ராமதாஸ், தாய் சரஸ்வதி உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார்.

இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி, சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோரும் வியாழக்கிழமை தைலாபுரம் தோட்டத்துக்கு வந்து, 3 மணி நேரத்துக்கு மேலாக பாமக நிறுவனர் ராமதாஸுடன் ஆலோசனை நடத்திச் சென்றனர். தனது நீண்டகால நண்பர் ராமதாஸ் என்ற அடிப்படையில், அவரைச் சந்திக்க வந்ததாக குருமூர்த்தி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.