கடனை செலுத்த வங்கி அதிகாரிகள் அழுத்தம்: பால் நிறுவன இயக்குநர் தற்கொலை!

வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தல்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

கடனை செலுத்த தனியார் வங்கி அதிகாரிகளின் அழுத்தத்தால் தனியார் பால் நிர்வாக இயக்குநர் ஜே.ராஜபாண்டி தற்கொலை கொண்ட நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

மதுரை மாவட்டம், மேலூரில் உள்ள தனியார் பால் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜே.ராஜபாண்டி தனியார் வங்கியில் பெற்றிருந்த கடனை செலுத்துவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக வங்கி அதிகாரிகள் அளித்த நெருக்கடியால் நேற்று (ஜூன் 27) மதுரையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு கடும் அதிர்ச்சியளிக்கிறது.

கரோனா நோய்த் தொற்று காலத்திற்குப் பின்னர் பால் வணிகத்தில் ஏற்பட்ட மாற்றங்களாலும், அதன் பிறகு தொழிலில் ஏற்பட்ட சரிவாலும் தனியார் வங்கியில் பெற்றிருந்த ரூ. 3 கோடி கடனை கடந்த 7 மாதமாக திரும்ப செலுத்துவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதால் வங்கி அதிகாரிகள் நெருக்கடி கொடுக்கவே அவர் தரப்பிலிருந்து கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.

ஆனால், வங்கி அதிகாரிகள் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் ஏழு மாத தவணையை உடனடியாக மொத்தமாக செலுத்த வேண்டும் என கடும் நெருக்கடி கொடுத்து கறாராக கூறியதால் வேறு வழியின்றி ஏழு மாத தவணைக்கான தொகை சுமார் ரூ. 35 லட்சத்தை தயார் செய்து கொண்டு நேற்றைய நாள் வங்கியில் வரைவோலை (DD) எடுக்க சென்றிருந்த சமயத்தில் தனியார் வங்கி அதிகாரிகள் தனியார் பால் நிறுவனத்திற்கு வந்து பணி முடிந்து பூட்டப்பட்டிருந்த நிறுவனத்தின் பூட்டினை உடைத்து சீல் வைத்து சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் தரப்பிலிருந்து வங்கிக்கு சென்று, நாங்கள்தான் ஏழு மாத தவணையை மொத்தமாக செலுத்த டிடி எடுக்கச் சென்றிருந்தோம். அதற்குள் இப்படி செய்து விட்டீர்களே..? என கேட்டதற்கு கடனை அசலும், வட்டியும் சேர்த்து மொத்தமாக செலுத்தியாக வேண்டும் என நிர்பந்தம் செய்துள்ளதோடு, அப்போதுதான் சீலினை அகற்ற முடியும் என வங்கி அதிகாரிகள் ஆணவத்துடன் கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்து, மன உளைச்சலுக்கு ஆளான ராஜபாண்டி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

எனவே தொழில் நலிவடைந்திருந்த சமயத்தில் கொடுத்த கடனை திரும்ப வசூலிக்க கடும் நெருக்கடி கொடுத்து, மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கி தனியார் பால் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜபாண்டியின் தற்கொலைக்கு காரணமான தனியார் வங்கி அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசையும், காவல்துறையையும், மதுரை மாவட்ட ஆட்சியரையும் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநரையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாக அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The Tamil Nadu dairy Agents Workers Welfare Association has urged action against private dairy managing director J. Rajapandi, who committed suicide due to pressure from private bank officials to repay a loan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com