
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக வலம் வந்த நடிகை பிந்து கோஷ் இன்று (மார்ச் 16) காலமானார். அவருக்கு வயது 78.
1980களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், பிரபு என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்தவர் பிந்து கோஷ்.
சென்னையில் வசித்துவந்த இவர், கடந்த சில நாள்களாக வயது மூப்பு சார்ந்த உடல் பிரச்னையால் அவதியுற்றுவந்தார். மருத்துவ செலவுக்குக் கூட போதிய பணமின்றி உதவி நாடிய பிந்து கோஷுக்கு பிரபலங்கள் பலர் உதவிக்கரம் நீட்டினர்.
இதனிடையே இன்று பிற்பகல் சிகிச்சைப் பலனின்றி அவர் காலமானார். இதனை அவரின் மகன் உறுதிப்படுத்தியுள்ளார். அவரின் மறைவுக்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நகைச்சுவை நடிகை பிந்து கோஷ்
தமிழ் சினிமாவில் 100க்கும் அதிகமான படங்களில் பிந்து கோஷ் நடித்துள்ளார். மனோரமா, கோவை சரளா வரிசையில் குறிப்பிடத்தகுந்த பெண் நகைச்சுவை நடிகராகப் புகழ் பெற்றார்.
விமலா என்னும் இயற்பெயர் கொண்ட இவர், முதல்முறையாக நடிகர் கமல்ஹாசனின் களத்தூர் கண்ணம்மா படத்தில் நடனக் கலைஞராக அறிமுகமானார். இதில் எல்லோரும் நலம் வாழ.. என்ற பாடலில் கமல்ஹாசனுடன் நடினமாடியிருப்பார்.
1982-ல் பிரபு நடித்த கோழி கூவுது படத்தில் நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தார். இதில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தூங்காதே தம்பி தூங்காதே, மங்கம்மா சபதம், விடுதலை, நீதியின் நிழல், டெளரி கல்யாணம், சூரக்கோட்டை சிங்கக்குட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படிக்க | வெற்றிமாறன் பட வாய்ப்பை மறுத்த சீரியல் நடிகை கோமதி பிரியா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.