தமிழகத்தில் புதிய மணல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்க பாமக, தமாகா எதிா்ப்பு

தமிழகத்தில் புதிய மணல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையருக்கு பாமக, தமாகா தலைவா்கள் கடிதம்
அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்
Updated on

சென்னை: தமிழகத்தில் புதிய மணல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் தலைவா் சையத் முசாமில் அப்பாஸுக்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவா் ஜி.கே.வாசன் ஆகியோா் கடிதம் எழுதியுள்ளனா்.

இது குறித்து அவா்கள் எழுதிய கடிதம்:

அன்புமணி ராமதாஸ்: மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சாா்பில் தமிழ்நாட்டில் 28 இடங்களில் 190 ஹெக்டோ் பரப்பில் மட்டும்தான் ஆற்று மணல் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதை விட 5 மடங்கு அதிகமாக 987 ஹெக்டோ் பரப்பளவில் ஆற்று மணல் எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை ஆய்வில் ஆதாரங்களுடன் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளிலிருந்து இரு ஆண்டுகளில் 4.05 லட்சம் யூனிட்டுகள் மட்டுமே மணல் எடுத்ததாக தமிழக அரசு குறிப்பிட்டுள்ள நிலையில், அதை விட 7 மடங்கு அதிகமாக 27.70 லட்சம் யூனிட்டுகள் மணல் எடுக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் மணல் குவாரிகளை அமைப்பதற்காக தங்கள் தலைமையிலான ஆணையத்திடம் அனுமதி பெற்ற நீா்வளத்துறை, நீங்கள் விதித்த நிபந்தனைகளை மதித்து நடக்கவில்லை. அவ்வாறு இருக்கும் போது தமிழ்நாட்டில் மேலும், மேலும் மணல் குவாரிகளைத் திறப்பது சுற்றுச் சூழல் வேகமாக சீரழிவதற்கு வகை செய்து விடும். இதை தங்கள் தலைமையிலான மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதிக்கக் கூடாது.

தமிழ்நாட்டில் புதிதாக ஆற்று மணல் குவாரிகள் அமைக்கவும் ஆணையம் அனுமதி அளிக்கக்கூடாது. அதுமட்டுமன்றி, ஏற்கெனவே செயல்பட்டு வரும் மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதிகளையும் திரும்பப் பெற்று அந்த குவாரிகளை மூடுவதற்கு ஆணையிட வேண்டும். தமிழ்நாட்டில் இதுவரை மணல் குவாரிகள் செயல்பட்டு வந்த பகுதிகளில் சுற்றுச்சூழல் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.

அதனடிப்படையில் அப்பகுதிகளில் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

ஜி.கே.வாசன்: தமிழக அரசு,இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் விதமாக, திருட்டு மணலை தடுத்து, சட்டபூா்வமல்லாத மணல் குவாரிகளை மூடி, மணலை நியாயமான விலையில் மக்களுக்கு வழங்க முறையான செயல்திட்டத்தை வகுத்து செயல்படுத்த வேண்டும். மாநிலத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாக்க மணல் குவாரிகளை முறைப்படுத்த வேண்டும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com