
பாமக பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமாவை நீக்கி பாமக நிறுவனர்-தலைவர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக திருப்பூரைச் சேர்ந்த சையத் மன்சூர் என்பவரை பாமகவின் புதிய பொருளாளராக நியமித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கு எதிராக அன்புமணி ராமதாஸ் நடத்தும் இன்றைய கூட்டத்தில் திலகபாமா கலந்துகொண்டுள்ள நிலையில் அவரை ராமதாஸ் அதிரடியாக நீக்கியுள்ளார்.
இதேபோல அன்புமணி தலைமையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொண்ட அன்புமணி ஆதரவாளர்கள் பலரையும் கட்சிப் பதவிகளில் இருந்து ராமதாஸ் நீக்கி வருகிறார்.
இந்நிலையில், பாமகவின் பொருளாளராக திலகபாமாவே தொடர்வார் என்று அன்புமணி ராமதாஸ் பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அறிக்கையில், "பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளராக பொதுக்குழுவால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட திலகபாமா அப்பொறுப்பில் தொடர்வார் என்று அறிவிக்கப்படுகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் அவருக்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
ராமதாஸுக்கு பதிலளிக்கும் வகையில் அன்புமணி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது பாமகவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமகவின் மூத்த நிர்வாகிகள் பலரும் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கடும் விரக்தியில் இருப்பதாக பாமக எம்எல்ஏ அருள் கூறியுள்ளார்.
பாமகவில் உள்கட்சி மோதல்
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வந்தது.
ராமதாஸின் மகள்வழிப் பேரனான முகுந்தன் பரசுராமன் கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்தில் பாமக இளைஞர் சங்கத் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தபோது இந்த கருத்து மோதல் தொடங்கியது.
பின்னர் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கி செயல் தலைவராக அறிவித்தார் ராமதாஸ். பாமக தலைவராக தானே செயல்படப்போவதாகவும் அறிவித்தார். அதன் பிறகு ராமதாஸ் நடத்திய கூட்டங்களை அன்புமணி தொடர்ந்து புறக்கணித்து வந்தார். அன்புமணி ஆதரவாளர்கள் பலரும் ராமதாஸின் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில் நேற்று(வியாழக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், 'அன்புமணியை மத்திய அமைச்சராக்கி தவறு செய்துவிட்டேன். கட்சியின் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்து பல தவறுகளை அன்புமணி செய்துள்ளார். அவருக்கு தலைமைப் பண்பு இல்லை, இன்னும் பக்குவப்படவில்லை, பாஜக கூட்டணிக்காக என்னிடம் காலில் விழுந்து கெஞ்சினார்' என அன்புமணி மீது அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராமதாஸ், 'இனிமேல் அன்புமணி, செயல் தலைவர் பதவியை ஏற்று செயல்படுவது மட்டுமே தற்போதைய பிரச்னைக்கு முழுமையான தீர்வு' என்றும் கூறியிருந்தார்.
எனினும் பாமக மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்களைக் கூட்டி அன்புமணி ராமதாஸ் சென்னை சோழிங்கநல்லூரில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார். இன்று முதல் 3 நாள்களுக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்தவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.