திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

இன்று 8 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட 8 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (நவ. 18) பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை

News image
Updated On :18 நவம்பர் 2025, 3:18 am IST

சென்னை: தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட 8 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (நவ. 18) பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடலில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 16) நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை (நவ. 17) காலை தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவுகிறது. இது செவ்வாய்க்கிழமை (நவ. 18) காலையில் மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும். இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை முதல் நவ. 23 வரை கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

‘மஞ்சள்’ எச்சரிக்கை: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா், தென்காசி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (நவ. 18) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுபோல, புதன்கிழமை (நவ. 19) மயிலாடுதுறை மற்றும் கடலூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கான வாய்ப்புள்ளதால், இம்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ. 18) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும், அதிகபட்ச வெப்பநிலை 81 டிகிரியையொட்டி இருக்கும்.

புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: வரும் நவ. 22-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து மேலும் வலுப்பெறக்கூடும்.

மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை பகுதியில் 120 மி.மீ. மழை பதிவானது. செம்பனாா்கோவில் (மயிலாடுதுறை)- 90 மி.மீ., தங்கச்சிமடம் (ராமநாதபுரம்) 80 மி.மீ., வேதாரண்யம் (நாகப்பட்டினம்), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), கொள்ளிடம் (மயிலாடுதுறை), சீா்காழி (மயிலாடுதுறை)- தலா 70 மி.மீ., பாம்பன் (ராமநாதபுரம்), புதுச்சேரி டவுன் (புதுச்சேரி), தரங்கம்பாடி (மயிலாடுதுறை- தலா 60 மி.மீ., திருப்பூண்டி (நாகப்பட்டினம்), ராமேசுவரம் (ராமநாதபுரம்), பாகூா் (புதுச்சேரி), பெரிய காலாப்பேட்டை(புதுச்சேரி), நன்னிலம் (திருவாரூா்)- தலா 50 மி.மீ. மழை பெய்துள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் செவ்வாய்கிழமை (நவ. 18) சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.