காரைக்குடியில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழக பிரசாரக் கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்ட நேரத்தைக் கடந்து வந்ததால், கட்சித் தலைவர் விஜய் பேசாமலேயே, சாலைவலமாகச் சென்றுவிட்டார்.
பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பதாக தொடர்ந்து குற்றஞ்சாட்டும் தவெகவில், இன்று அனுமதி வழங்கியும் உரிய நேரத்துக்குள் வராமல், வெய்யிலில் நின்றிருந்த மக்களை ஏமாற்றியிருக்கிறார் விஜய்.
மதுரையில் இருந்து சாலை வழியாக காரைக்குடி வந்த விஜய், வழிநெடுகிலும் தவெகவினர் கொடுத்த உற்சாக வரவேற்பைப் பெற்றுக் கொண்டு ஆமை வேகத்தில் ஊர்ந்து வந்த வாகனத்தில் காரைக்குடிக்கு 12 மணிக்கு வந்து சேர வேண்டிய நிலையில், அனுமதி அளிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து அதாவது பிற்பகல் 2.40 மணிக்கு மேல்தான் வந்தடைந்தார்.
ஏதோ, காரைக்குடியில் பேசவே கூடாது என்று முடிவு கட்டிக்கொண்டு வந்தது போல, காரைக்குடி சாலையில் அவ்வளவு கூட்டம். அது மட்டும் இல்லாமல், திடீரென, விஜய்க்கு என்ன தோன்றியதோ பிரசார வாகனத்திலிருந்து இறங்கி, தவெக ஆதரவாளர் வைத்திருந்த ஒரு சைக்கிளை வாங்கிக் கொண்டு அதனை ஓட்டிக் கொண்டு வந்தார். சைக்கிளை ஓட்டுவதற்கு சாலையில் இடமேயில்லை. அவர் சைக்கிளை ஓட்ட வேண்டும் என்றால் அதற்கு முன்னாள் அவர் வந்த வாகனம் நெரிசலைத் தாண்டி ஓட வேண்டும். தவெக தொண்டர்களும் விஜய் பாதுகாவலர்களும், விஜய் சைக்கிளை பத்திரமாக ஓட்ட வேண்டும், அவருக்கு முன்னால் இருக்கும் வாகனத்தை அதற்கேற்ப நகர்த்த வேண்டும், இதனிடையே, தொண்டர்களின் தள்ளுமுள்ளுவில் சிக்கி விஜய்க்கு எதுவும் நேரிடக் கூடாது என்ற அழுத்தம் ஏற்பட்டது.
கிட்டத்தட்ட அங்கு ஒரு பதற்றமான சூழலே ஏற்பட்டுவிட்டது. ஒரு கட்டத்தில் சைக்கிளை தொண்டர்கள் தள்ளிக்கொண்டு வர, அதிலிருந்து விஜய் நிலைத்தடுமாறிக் கீழே விழப்போனார். ஆனால், நல்வாய்ப்பாக, அவரது பாதுகாவலர்கள் விஜய் கீழே விழாமல் தாங்கிப் பிடித்துக் கொண்டனர்.
பிறகு அவர் வந்த வாகனத்திலேயே பத்திரமாக ஏற்றி விட்டனர். பிறகுகாரைக்குடிக்கு சாலைவலமாக வந்தார் விஜய். மதுரையில் இருந்து சுமார் 4 மணி நேரம் ஆனது காரைக்குடி வருவதற்கு. அவர் காரைக்குடி வந்த போது மணி 2.40 ஆகிவிட்டதால், பிரசாரம் செய்ய காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.
இதன் காரணமாக, காரைக்குடியில் தவெக வேட்பாளரை அறிமுகம் செய்து, பிரசாரம் செய்ய வேண்டிய விஜய், எதுவுமே பேசாமல் சாலைவலமாக கையசைத்தபடி சென்றுவிட்டார்.
காரைக்குடியில் கண்ணதாசன் மணிமண்டபம், நான்கு சாலை சந்திப்பு ஆகிய பகுதிகளில் பகல் 12 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை தவெக தலைவா் விஜய் வாகன பிரசாரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. விஜய் பேச வருகிறார் என்று செய்தியறிந்து காலை 10 மணி முதல், காரைக்குடி நான்கு சாலை சந்திப்புப் பகுதியில் மக்கள் கூட்டம் கூட ஆரம்பித்தது. கிட்டத்தட்ட 3 அல்லது 4 மணி நேரமாக கொளுத்தும் வெயில் என பாராமல் ஏராளமான மக்கள் அங்கே நின்று கொண்டிருந்தனர். விஜய் வருகிறார், இதோ வருகிறார், சைக்கிளில் வருகிறார் என்று அவ்வப்போது மக்களுக்கு யாரோ ஒருவர் செல்போனில் விடியோக்களைப் பார்த்தபடி அப்டேட் கொடுக்க.. கடைசியாக விஜய் வந்தது 2.40 மணிக்கு. காலை சாப்பாட்டை முடித்து பிரசாரத்துக்கு வந்த மக்கள், மதிய சாப்பாடு நேரம் முடிந்துகூட விஜய்யைப் பார்க்காமல் நின்றிருந்தனர். இறுதியாக விஜய் வந்த போது, அவர் ஓரிரு வார்த்தைகள் பேசுவார், அதைக் கேட்டுவிடலாம் என்று இருந்தவர்களுக்கு சற்று நேரத்தில் நடந்தது எதுவுமே புரியவில்லை.
விஜய் பிரசார வாகனத்தில் காரைக்குடி வேட்பாளர் பிரபு ஏறினார். அவரை மக்களுக்கு விஜய் அறிமுகம் செய்து வைத்தார். பிறகு விஜய் வாகனம் காரைக்குடி நான்குமுனை சந்திப்பிலிருந்து புறப்பட்டுவிட்டது.
காலையில் இருந்து காத்திருந்த தவெக தொண்டர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. அவர்கள் வெகுநேரம் காத்திருந்தார்கள். விஜய் பிரசாரம் செய்யவில்லை என்பதை காவல்துறை அறிவுறுத்தி கலைந்துசெல்ல சொன்னபோதும், யாருக்கும் புரியவில்லை. ஏன் கலைந்துசெல்ல வேண்டும் என்று?
தவெக தலைவா் விஜய் பிரசாரம் செய்ய ஏற்கனவே ஏகப்பட்ட கெடுபிடி என்று அக்கட்சியே குற்றம்சாட்டுகிறது. இந்த நிலையில்தான் காரைக்குடியில் விஜய் இன்று பிரசாரம் செய்ய 37 நிபந்தனைகளுடன் காவல்துறையினா் அனுமதி அளித்தனா். இதற்காக, தவெக வேட்பாளர் டி.கே. பிரபு மனு கொடுத்து அனுமதி வாங்கியிருந்தார்.
இதற்காக, மதுரை விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக காரைக்குடி வந்து பிரசாரம் செய்துவிட்டு மீண்டும் அதே வழியில் விஜய் திரும்ப வேண்டும். ஆனால், இந்த திட்டத்தில், விஜய் சாலையிலேயே அதிக நேரத்தை செலவிட்டுவிட்டதால், பிரசாரமே ரத்தாகிவிட்டது. பிரசாரத்துக்கு அனுமதிகேட்டு பெற்றுத்தந்த கட்சியின் வேட்பாளரின் பெயரைச் சொல்லி அவருக்காக வாக்குக் கேட்கும் வாய்ப்பும் பறிபோனது.
பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டால் அதிருப்தி தெரிவிக்கும் தவெக தலைவர் விஜய், இப்போது, கட்சித் தலைவர் விஜய் வந்து வாக்குக் கேட்டால், தனக்கு வாக்குகள் விழும் என்ற நம்பிக்கையோடு இருந்த வேட்பாளருக்கும். விஜய் பேசுவதைப் பார்க்க ஆவலோடு இருந்த மக்களுக்கும் ஏமாற்றம் கொடுத்ததற்கு என்ன சொல்லப் போகிறார்.
பிரசாரம் செய்ய வந்த வேலையை விட்டுவிட்டு சைக்கிள் ஓட்ட வேண்டிய அவசியம் என்ன விஜய் சார்? என்று கடும் வெய்யிலில் நின்றிருந்த மக்கள் அங்கலாய்க்கிறார்கள்.
Summary
People asked Vijay sir if he should leave his campaigning and ride a bicycle.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக தலைவா் விஜய் பிரசாரத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி

விஜய்யின் கன்னியாகுமரி பிரசாரத்துக்கு அனுமதி!

நெல்லையில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி!

தவெக தலைவா் விஜய் இன்று வேட்புனு தாக்கல்: மரக்கடையில் பிரசாரத்துக்கு அனுமதி
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


