FOLLOW US

ON GOOGLE DISCOVER

/

உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு! விமானத்தில் சென்னை திரும்புகிறார்!

செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்டார்.

News image

உதயநிதி ஸ்டாலின் - எக்ஸ்

Updated On :4 ஆகஸ்ட் 2026, 8:38 pm IST

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி அவர் விடுவிக்கப்பட்டார்.

மாலை 6.45 மணிக்குத் தொடங்கிய விசாரணை இரவு 8.25 மணிக்கு நிறைவடைந்தது. விசாரணை முடிந்து காவல் நிலையத்தில் இருந்து வெளியேறிய உதயநிதியை தொண்டர்கள் மாலை அணிவித்து உற்சாகத்துடன் வரவேற்றனர்.

கொட்டும் மழையிலும் காத்திருந்த தொண்டர்களை நோக்கி கையசைத்தவாறு வாகனத்தில் ஏறி உதயநிதி ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார். வழிநெடுகிலும் சாலையின் இரு புறத்தில் தொண்டர்கள் சூழ்ந்து நின்று உதயநிதியை வரவேற்றனர்.

விசாரணைக்காக காவல் துறை வாகனத்தில் அழைத்துவரப்பட்ட உதயநிதி, தற்போது தனது காரில் புறப்பட்டுச் சென்றார். சாலை மார்க்கமாக திருச்சி சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்லவுள்ளதாகத் தெரிகிறது.

காவிரி விவகாரம் தொடர்பாக தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் திமுக சார்பில் நேற்று (ஆக. 3) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் உதயநிதி மீது தவெக மகளிரணியினர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பின்னர், சென்னை நீலாங்கரை இல்லத்திற்கு வந்த காவல் துறையினர் உதயநிதி ஸ்டாலினை, கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றனர்.

தஞ்சாவூர் தெற்கு நகர காவல் நிலையத்தில் விசாரணை நடத்த வேண்டியிருந்தது. ஆனால், அங்கு அதிகப்படியான தொண்டர்கள் குவிந்திருந்ததால், செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து உதயநிதியிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

முதலில் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணைக்கு இறங்க மறுப்பு தெரிவித்த நிலையில், எ.வ. வேலு, கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் உடனான ஆலோசனைக்குப் பிறகு செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணைக்கு சம்மதம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் உதயநிதியிடம் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்த பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.

Summary

Udhayanidhi Stalin released after police inquiry

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.