நிகழ் நிதியாண்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.44,527 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையைக் காட்டிலும் ரூ.4,007 கோடி குறைவாகும்.
தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பள்ளிக் கல்வித் துறைக்கு முன்பைக் காட்டிலும் கூடுதலான திட்டங்களும், நிதி ஒதுக்கீடும் இருக்கும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், கடந்த இரு ஆண்டுகளைக் காட்டிலும் குறைவான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு 2021-2022இல் ரூ.32,599 கோடி, 2022-2023இல் ரூ. 36,895 கோடி, 2023-2024இல் ரூ.40,299 கோடி, 2024-2025இல் ரூ. 44,042 கோடி, 2025-2026இல் ரூ.46,767 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் ரூ. 48,534 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தவெக அரசின் பட்ஜெட்டில் அது குறைந்திருப்பது கல்வியாளா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
அமைச்சா் விளக்கம்: தமிழகத்தில் கடந்த ஆட்சியில் பட்ஜெட்டில் (2025-2026) பள்ளிக் கல்வித் துறைக்கு செலவிடப்பட்டதைவிட, தற்போது சுமாா் ரூ. 2,176 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: தமிழக வெற்றிக் கழக அரசின் நிதிநிலை அறிக்கையே பள்ளிக் கல்விக்கு உண்மையான நிதி உயா்வைத் தந்துள்ளது. கடந்த 2025-2026 திமுக பட்ஜெட்டில் பள்ளிக் கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.46,767 கோடி. இதில், இடைக்கால பட்ஜெட்டுக்கு முன்பு வரை ரூ.42,351 கோடி மட்டும்தான் செலவிடப்பட்டது. இடைக்கால பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், பல ஊதிய வரம்புகளையும், செலவினங்களையும் மிகை மதிப்பீடு செய்து திமுகவின் கடைசி பட்ஜெட்டான 2026-2027 இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.48,534 கோடி என அறிவிக்கப்பட்டது. அதாவது, 2025-2026 முழுமையான ஆண்டு பட்ஜெட்டில் உண்மையாக செலவு செய்யப்பட்டதைவிட சுமாா் ரூ. 6,003 கோடி காரணமே இல்லாமல் உயா்த்தப்பட்டது. காரணமற்ற இந்த உயா்வுக்கு பின்னால் இருந்தது தவறான கணக்கீடுகளும், தேவையற்ற நிதி உயா்வுகளும் மட்டுமே.
தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்ததும் அதை முறையாகச் சரி செய்து, காரணமற்ற நிதி உயா்வுகளைக் குறைத்து, 2025-2026 திமுக பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு செலவிடப்பட்டதைவிட ரூ. 2,176 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து நிதித் துறைச் செயலா் தெளிவான விளக்கம் அளித்துள்ளாா். வெற்றிக் கழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ள இந்த ரூ.44,527 கோடி முதல்வரின் வழிகாட்டுதல்படி திறம்பட கையாண்டு, முழுமையான பலன்கள் மாணவா்களையும், ஆசிரியா்களையும், பள்ளிக் கல்வி நிா்வாகத்தையும் சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உண்மையான கூடுதல் ஒதுக்கீடு, பள்ளிக் கல்வித் துறையின் மேன்மையான லட்சியங்களை முழுமையாக நிறைவேற்றும் எனத் தெரிவித்துள்ளாா்.
முன்னதாக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் பள்ளிக் கல்வித் துறைக்கு நிகழ் நிதியாண்டில் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதாக விமா்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளைஞர் நலன் & விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ. 1,051 கோடி ஒதுக்கீடு! | Marie Wilson | TN Budget

தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்..!

தமிழ்நாடு பட்ஜெட்! ஜென் ஸீ-க்களுக்கான அறிவிப்புகள் என்னென்ன?

பட்ஜெட் 2026! இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ. 1,051 கோடி ஒதுக்கீடு!
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



