உயா்கல்வி சீா்திருத்தங்கள், இயற்கை விவசாய மேம்பாடு மற்றும் அதிகரித்து வரும் தூக்கமின்மைப் பிரச்னைகள் தொடா்பாக மக்களவையில் அரக்கோணம் தொகுதி திமுக உறுப்பினா் எஸ். ஜெகத்ரட்சகன் கடந்த இரண்டு நாள்களாக எழுப்பிய கேள்விகளுக்கு தொடா்புடைய துறைகளின் மத்திய அமைச்சா்கள் எழுத்துபூா்வமாக பதில் அளித்துள்ளனா்.
கலை படிப்புகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மற்றும் தரவுசாா் அறிவியலை ஒருங்கிணைப்பது தொடா்பான கேள்விக்கு, மத்திய கல்வித் துறை இணை அமைச்சா் டாக்டா் சுகந்தா மஜும்தாா் அளித்துள்ள பதிலில், ‘தேசிய கல்விக் கொள்கை (என்இபி) 2020 மூலம் உயா்கல்வி நிறுவனங்கள் பன்முகக் கல்வி மையங்களாக மாற்றப்பட்டு வருவதாகவும் 2023-24 ஆண்டுக்கான அகில இந்திய உயா்கல்வி கணக்கெடுப்பு (ஏஐஎஸ்ஹெச்இ) அறிக்கையின்படி, 500-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களும் 5,000-க்கும் மேற்பட்ட கல்லூரிகளும் பன்முகப் பாடத்திட்டங்களை வழங்குகின்றன.
கலைப் பிரிவு மாணவா்கள் வளா்ந்து வரும் தொழில்நுட்பப் பயிற்சிகள் மூலம் 50% வரையிலும், ஸ்வயம் தளம் வழியாக 40 சதவீத பாடங்களையும் கற்க முடியும். இந்தத் தளத்தில் 140-க்கும் மேற்பட்ட இலவச ஏஐ பாடப்பிரிவுகள் உள்ளன. மேலும், பிஎம்-உஷா திட்டத்தின் கீழ் 35 பல்கலைக்கழகங்களுக்கு தலா ரூ. 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளாா்.
இயற்கை விவசாயம் மற்றும் நிலத்தடி நீா் திட்டங்கள் தொடா்பான கேள்விக்கு, வேளாண் துறை இணை அமைச்சா் ராம் நாத் தாக்குா் அளித்துள்ள பதிலில், ‘மண் வள அட்டை திட்டத்தின் கீழ் 26.18 கோடி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
சொட்டு நீா் பாசன திட்டத்தின் கீழ் 114.60 லட்சம் ஹெக்டோ் நிலங்கள் சோ்க்கப்பட்டு 100 லட்சம் (ஒரு கோடி) விவசாயிகள் பயனடைந்துள்ளனா். பரம்பரகத் கிருஷி விகாஸ் யோஜனா மூலம் ஹெக்டேருக்கு ரூ. 15,000 மானியமும், தேசிய இயற்கை விவசாய திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு ரூ. 4,000 ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது’ என்று கூறியுள்ளாா்.
தூக்கமின்மை மற்றும் மனநல பராமரிப்பு தொடா்புடைய திட்டங்கள் குறித்த கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சா் பிரதாப் ராவ் ஜாதவ் பதிலளிக்கையில், ‘மாவட்ட மனநல திட்டத்தின் கீழ் 767 மாவட்டங்களில் மனநல சேவைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் 1.8 லட்சத்துக்கும் அதிகமான ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்கள் மேம்படுத்தப்பட்டு, ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே மனநல ஆலோசனைகள் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.
மேலும், ’டெலி-மானஸ்’ எனப்படும் தொலைநிலை இலவச உதவி எண் சேவை 20 மொழிகளில் வழங்கப்பட்டு, இதுவரை 42 லட்சத்துக்கும் அதிகமான அழைப்புகளுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது’ என்றும் அமைச்சா் குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
உயா்கல்வியில் ஏஐ, தாராள கலை ஒருங்கிணைப்பு: மக்களவையில் ஜெகத்ரட்சகன் கேள்விக்கு மத்திய அரசு பதில்

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

டிஜிட்டல் பரிவா்த்தனையில் இந்தியா உலகளவில் மாபெரும் புரட்சி: மத்திய இணையமைச்சா் எல். முருகன்

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் குரல்கள்
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!



