கர்நாடகத்தில் 3 தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த அமைச்சர் நிர்மல்குமாரின் சர்ச்சைப் பேச்சுக்கு அவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் கண்டித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை அந்தத் துறையின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் 4 நாள்கள் விடுமுறைக்குப் பின்னர் நேற்று (ஆக. 18) தொடங்கியது.
சட்டப்பேரவையில் இந்த வாரத்தின் 2 ஆம் நாளான இன்று கர்நாடகத்தின் வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, சௌமியா உள்ளிட்டோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.
இந்தக் கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேசினார். அவர் பேசுகையில், “கர்நாடக மாநிலம், சாமராஜ்நகர் மாவட்டம், ஹனூர் வட்டம், ஷக்யா வனச்சரகத்துக்கு உள்பட்ட கரடிக்குட்டா காட்டுப் பகுதியில் ஆக. 15 காலை 6 மணி அளவில் காவிரி வனவிலங்கு சரணாலயத்தில், வனத்துறையினர் மூன்று பேரை சுட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில், தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட அந்தோணிசாமி (50), ஜான்ரோஸ் பீட்டர் (42), குமார் சவரியப்பன் (35) ஆகியோர் கொல்லப்பட்டனர். ஜோசப் மரியதாஸ், பெஞ்சமின் இருவரும் தப்பிச்சென்று சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் கர்நாடக அரசு உறுதியளித்திருக்கிறது. சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதியப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள முதல்வர் விஜய், இதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும், வனத்துறை கொடுத்த விளக்கம் ஏற்புடையதல்ல என்றும் தெரிவித்திருக்கிறார்.
உலகமெங்கிலும் இருக்கும் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் ஒரே நம்பிக்கை நம்முடைய முதல்வர் விஜய் அவர்கள் மட்டுமே. இன்று தமிழர்கள் எங்கு தீங்கு நடந்தாலும், முதல் குரலாக முதல்வரின் குரல் இருக்கும். ஒரு சிலருக்கு திடீரென்று தமிழ் பாசம், தமிழர்கள் பாசம் இருக்கும்.
அதையெல்லாம் நம்முடைய வரலாற்றில் நாம் பார்த்ததுதான். 2009-ஆம் ஆண்டில் அடையாள உண்ணாவிரத நாடகம். மழைவிட்டாலும் தூவானம் விடாது...” என்று தொடர்ந்து பேச அவையில் திமுக கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
அமைச்சர் நிர்மல்குமாரின் பேச்சைக் குறுக்கிட்டு நிறுத்திய அவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர், அமைச்சரின் பேச்சைக் கண்டித்ததோடு, அவரின் பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்குவதாகத் தெரிவித்தார்.
மேலும், “கவன ஈர்ப்பு தீர்மானம் தொடர்பான கருத்துகள் மட்டுமே அவைக்குறிப்பில் இருக்கும். கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு சம்பந்தம் இல்லாத கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும். யாருடைய கவனத்தை ஈர்ப்பதற்காக இதுபோன்று பேசுகிறார் எனத் தெரியவில்லை. கவன ஈர்ப்பு தீர்மானத்தை ஒட்டிய கருத்துகளை மட்டுமே உறுப்பினர்கள் பேச வேண்டும்” என்றார் பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடர்பாக வனத்துறை அமைச்சர் ரஞ்சித் பேசியதற்கு முதல்வர் விஜய் நேற்று மன்னிப்பு கோரியிருந்த நிலையில், இன்றும் கருணாநிதி குறித்த பேச்சால் அவையில் சிறிது நேரம் சலசலப்பான சூழல் உருவானது.
Summary
The Speaker has condemned the controversial remarks made by Minister Nirmal Kumar regarding former Chief Minister Karunanidhi during a special calling-attention motion concerning the shooting death of three Tamils in Karnataka.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





