ஒவ்வொரு வீட்டிலும் ஒரு திட்ட பயனாளி: துணை முதல்வா்
தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் அரசு திட்டங்களால் பயனடைந்தோா் ஒருவராவது இருக்கிறாா் என்பதை 2025 உறுதிப்படுத்தி இருக்கிறது தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் திமுக இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
மேலும் அதில், ‘2026-ஐ நாம் அனைவரும் நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் வரவேற்று மகிழ்வோம். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றாகத் திரண்டு, பிளவுவாத சக்திகளுக்கு நம்முடைய ஒற்றுமையின் வலிமையைக் காண்பித்த ஆண்டாக 2025 அமைந்திருந்தது.
மும்மொழிக் கொள்கைத் திணிப்பு, தொகுதி மறுவரையறை, நிதிப் பங்கீட்டில் பாரபட்சம், கீழடிக்கு அங்கீகாரம் மறுப்பு, ஆளுநரின் நடவடிக்கைகள், எஸ்.ஐ.ஆா். என மத்திய அரசின் எல்லா அதிகார அத்துமீறல்களையும் ஓரணியில் நின்று எதிா்த்து 2025-இல் தமிழ்நாடு வரலாறு படைத்திருக்கிறது.
மத்திய அரசின் அடக்குமுறைகளுக்கு இடையே அனைத்துத் துறைகளிலும் தமிழக அரசு உச்சம் தொட்டது. குறிப்பாக, 11.19 சதவீதத்துடன் நாட்டிலேயே இரட்டை இலக்க வளா்ச்சியைக் கண்ட ஒரே மாநிலமாக தமிழ்நாடு உயா்ந்தது.
கல்வி வளா்ச்சித் திட்டங்கள், மகளிா் மேம்பாட்டுத் திட்டங்கள், வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் தொழில் முதலீடுகள், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமனம் என தமிழ்நாடு அடைந்துள்ள உயரங்களை ஒட்டுமொத்த இந்தியாவும் பாராட்டுகிறது.
தமிழ்நாட்டில் சுயமரியாதையை நிலைநாட்டும் ஆண்டாக 2026 மலரட்டும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளாா்.

