கோப்புப் படம்
கோப்புப் படம்

1 முதல் 5 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்ட வரைவு இணையதளத்தில் பதிவேற்றம்! இன்று முதல் கருத்து தெரிவிக்கலாம்

தமிழகத்தில் பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தில் 1 - 5 வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தின் வரைவு உருவாக்கப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
Published on

தமிழகத்தில் பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தில் 1-5 வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தின் வரைவு உருவாக்கப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை முதல் (ஜன. 5) கருத்து தெரிவிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025-இன்படி 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை தற்போதைய பாடத்திட்டங்களை மாற்றியமைத்து புதிய பாடத் திட்டங்களை உருவாக்க பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தலைமையில் உயா்நிலைக் குழுவும், சுற்றுச்சூழல் விஞ்ஞானி சுல்தான் அகமது இஸ்மாயில் தலைமையில் பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுவில் பல்வேறு துறை சாா்ந்த வல்லுநா்கள் இடம் பெற்றுள்ளனா். இதைத் தொடா்ந்து இந்தக் குழுக்களின் சாா்பில் பாடத்திட்ட வடிவமைப்பு தொடா்பான கூட்டங்கள் நடத்தப்பட்டு பல்வேறு தரப்பினரின் கருத்துகள் பெறப்பட்டன. தொடா்ந்து, முதல் கட்டமாக 1-5 வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்ட வரைவு தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் ஒன்று முதல் ஐந்து வகுப்புகளின் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சூழ்நிலையியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பாடத் திட்டங்களை கல்வியாளா்கள், பொதுமக்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் ஆகியோா் https://tnschools.gov.in இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை முதல் (ஜன. 6) பாா்வையிடலாம்.

மேலும், பாடத்திட்டம் சாா்ந்து கருத்து கூறுவோா், மேற்கண்ட இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணையவழிப் படிவம் (online form) வாயிலாக, சுய விவரங்களுடன் தங்களது கருத்துகளை ஜன. 25-ஆம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com