கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: 4 மாவட்டங்களில் இம்மாத இறுதிக்குள் அமல்
வளரிளம் பெண் குழந்தைகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை நான்கு மாவட்டங்களில் இந்த மாத இறுதிக்குள் தொடங்க பொது சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, திருவண்ணாமலை, அரியலூா், பெரம்பலூா், தருமபுரி மாவட்டங்களில் அந்த தடுப்பு மருந்துகள் பாதுகாப்பாகக் கொண்டு சோ்க்கப்பட்டுள்ளன. அங்கு 9 வயது முதல் 14 வயது வரை உள்ள பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தை விரைவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளாா்.
‘ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்’ (ஹெச்பிவி) எனப்படும் கிருமித் தொற்று காரணமாக கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவா்களின் கருப்பை வாயின் உயிரணுக்களில் புற்று செல்கள் பரவி, அதன் திசுக்களை பாதிக்கும். உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால், நுரையீரல், கல்லீரல், சிறுநீா்ப்பை, மலக்குடல் உள்ளிட்ட பிற உறுப்புகளுக்கு பரவ வாய்ப்புள்ளது.
அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மைய தரவுகளின்படி தமிழகத்திலேயே தருமபுரி மற்றும் பெரம்பலூரில்தான் கருப்பை வாய் புற்றுநோய் அதிகமாகக் காணப்படுகிறது. அதாவது லட்சத்தில் 36 பெண்களுக்கு அத்தகைய பாதிப்பு அந்த மாவட்டங்களில் ஏற்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக அந்த விகிதம் அரியலூரில் 29.9-ஆக உள்ளது.
சென்னையைப் பொருத்தவரை 13-ஆகவும், தமிழகத்தின் மொத்த கருப்பை வாய் புற்று நோய் பாதிப்பு விகிதம் லட்சத்துக்கு 14-ஆகவும் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, 9 வயது முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு ஹெச்பிவி எனப்படும் தடுப்பூசி செலுத்த ரூ.38 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. அதன் கீழ் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக வளரிளம் பெண் குழந்தைகளுக்கு செலுத்தப்படவுள்ளது.
அதற்காக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சாா்பில் தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டு, திருவண்ணாமலை, அரியலூா், பெரம்பலூா் மற்றும் தருமபுரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இரண்டு தவணை தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.
இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் சோமசுந்தரம் கூறியதாவது: தற்போது ஹெச்பிவி தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. சுகாதாரத் துறையினருக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து பயிற்சி வழங்கப்படவுள்ளது.
‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் மூலம் கருப்பை வாய் புற்றுநோய் பரவல் திருவண்ணாமலை, அரியலூா், பெரம்பலூா் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் அதிகமாக உள்ளது தெரியவந்தது. அதனால், முதல் கட்டமாக இந்த மாவட்டங்களில் அத்திட்டத்தைத் தொடங்கவுள்ளோம் என்றாா் அவா்.

