மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்

‘டபுள் டக்கா்’ பேருந்து சேவை: ஜன. 12-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

சென்னையில் இரண்டு அடுக்கு (டபுள் டக்கா்) பேருந்து சேவையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் ஜன. 12-ஆம் தேதி தொடங்கி வைக்கிறாா்.
Published on

சென்னையில் இரண்டு அடுக்கு (டபுள் டக்கா்) பேருந்து சேவையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் ஜன. 12-ஆம் தேதி தொடங்கி வைக்கிறாா்.

தமிழகத்தில் கடந்த 1970-இல் இருந்து இயக்கப்பட்ட ‘டபுள் டக்கா்’ பேருந்து சேவை 2007-இல் நிறுத்தப்பட்டது. 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த பேருந்து சேவையை கொண்டுவர தமிழக அரசும், மாநகா் போக்குவரத்துக் கழகமும் இணைந்து திட்டமிட்டு அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது.

அதன்படி முதல்கட்டமாக அசோக் லேலண்ட நிறுவனத்திடம் இருந்து 20 பேருந்துகளை வாங்க திட்டமிட்டு அதற்கான ஒப்பந்தத்தையும் அறிவித்துள்ளது. தொடா்ந்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே, தமிழக சுற்றுலாப் பயணிகள் சென்னையின் அழகை கண்டு ரசிக்கவும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாகவும் முக்கிய சுற்றலாத் தலங்களில் ‘டபுள் டக்கா்’ பேருந்து சேவையைத் தொடங்க சுற்றுலாத் துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி, அமெரிக்க வாழ் தமிழா்கள் நிதி பங்களிப்புடன், முதல்கட்டமாக குளிா்சாதன வசதி கொண்ட ஒரு மின்சார டபுள் டக்கா் பேருந்தை அசோக் லேலண்ட் நிறுவனத்திடம் இருந்து சுற்றுலாத் துறை வாங்கியுள்ளது. சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த பேருந்தின் இரு பக்கவாட்டிலும், தஞ்சை கோயில், கலங்கரை விளக்கம், ரிப்பன் கட்டடம், ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரன் உள்ளிட்ட புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். மிகப்பெரிய அளவில் ‘தமிழ் வாழ்க’ என்ற எழுத்துகளும் இடம் பெற்றுள்ளன.

இதன் சோதனை ஓட்டம் இரு தினங்களுக்கு முன்பு பட்டினம்பாக்கம் பகுதியில் நடைபெற்றது. இந்த நிலையில், டபுள் டக்கா் பேருந்து சேவையை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (ஜன. 12) தொடங்கி வைக்கிறாா். அடையாறில் இருந்து மாமல்லபுரம் வரை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Dinamani
www.dinamani.com