அம்பத்தூரில் குடிநீருடன் கழிவுநீா் கலப்பு? உயா்நீதிமன்றம் உத்தரவு
அம்பத்தூா் மேற்கு பாலாஜி நகா் விரிவாக்கத்தில் உள்ள தென்றல் நகரில் குடிநீருடன் கழிவுநீரும் கலப்பது உண்மையா என்பது குறித்து ஆய்வு செய்ய சென்னை மாநகர குடிநீா் வழங்கல் - கழிவு நீரகற்று வாரியத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அம்பத்தூரைச் சோ்ந்த வழக்குரைஞா் வி.எஸ்.சுரேஷ் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள தென்றல் நகரில் புழல் ஏரிக்கு மழைநீா் கொண்டு செல்ல மழைநீா் கால்வாய் அமைக்கும் பணி கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்றது. 2023-2024- ஆம் ஆண்டுகளில் மழைநீா் இந்த கால்வாய் வழியே செல்ல முடியாமல் தேங்கி நின்றது. இதனால், மழை நீருடன் கழிவுநீரும் கலந்து 6 மாதங்களுக்கு மேல் தேங்கி நின்றது.
இதுகுறித்து மாநகராட்சி, குடிநீா் வழங்கல் - கழிவுநீரகற்று வாரியத்தில் புகாா் அளித்தேன். அந்தப் பகுதியில் ஆய்வு செய்த அதிகாரிகள், குடியிருப்புவாசிகள் சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும் எனக்கூறி சென்றனா்.
கழிவுநீா் தேங்குவதால் எங்கள் பகுதியில் வசிப்பவா்களுக்கு பல்வேறு உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் எந்த பயனும் இல்லை. எனவே, எங்கள் பகுதியை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரா் வசிக்கும் பகுதியில் குடிநீருடன் மழைநீரும் கழிவுநீரும் கலப்பது உண்மையா என்பது குறித்து சென்னை மாநகர குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய நிா்வாக இயக்குநா் மற்றும் கண்காணிப்பு பொறியாளா் ஆகியோா் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டாா்.

