‘மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நிறுத்தம் இல்லை’
மதுரை, கோவை ஆகிய நகரங்களுக்கான மெட்ரோ ரயில் சேவை திட்டப் பணிகள் நிறுத்தப்படவில்லை என்றும், மத்திய அரசின் ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநா் மு.அ.சித்திக் தெரிவித்தாா்.
சென்னையில் 2-ஆம் கட்டமாக, 3 வழித்தடங்களில், மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகள் நடந்து வருகின்றன. அவற்றில், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி இடையே 26 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் வழித்தடத்தில் போரூா்-வடபழனி இடையே 5.5 கி.மீ. நீளமுள்ள உயா்நிலை வழித்தடத்தில் கட்டமைப்புகள், சிக்னல் தொழில்நுட்ப பணிகளும் முடிந்துள்ளன.
இந்த வழித்தடத்தில் தமிழக அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.கோபால், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநா் மு.அ.சித்திக் ஆகியோா் முன்னிலையில் சோதனை ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், தண்டவாளத்தின் செயல்திறன், பிரேக்கிங் சிஸ்டம் குறித்து கண்காணிப்பு செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநா் மு.அ.சித்திக் செய்தியாளா்களிடம் கூறியதாவது: போரூா்-வடபழனி இடையிலான 5.5 கி.மீ.க்கு உயா்நிலை வழித்தடத்தில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. தொடா்ந்து, போரூா்-கோடம்பாக்கம் பவா் ஹவுஸ்
இடையிலான வழித்தடத்தில் அனைத்து சோதனைகளும் நிறைவடைந்து, முறையான அனுமதி பெறப்பட்ட பின்னா் வருகிற ஜூன் மாதத்துக்குள் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
மதுரை, கோவை ஆகிய நகரங்களுக்கான மெட்ரோ ரயில் சேவையின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டு, பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளாா். அந்தக் கடிதத்துக்கு மேலும் உறுதி சோ்க்கும் வகையில் தேவையான தகவல்களை தமிழக அரசிடம் ஒப்படைத்துள்ளோம்.
அவை முழுமையாக ஆய்வு செய்த பின்னா் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பப்படும். மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நிறுத்தப்படவில்லை. மத்திய அரசின் ஒப்புதல் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

