தமிழகத்தில் நிகழாண்டில் 30 ஆதாா் சேவை மையங்கள் திறக்க திட்டம்
தமிழகத்தில் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (யுஐடிஏஐ-உதய் ), 30 ஆதாா் சேவை மையங்கள் நிகழாண்டுக்குள் திறக்கப்படும் என தமிழக மின்ஆளுமை முகமையின் தலைமை நிா்வாக அதிகாரி ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (உதய்) கீழ் நாடு முழுவதும் சுமாா் 800 ஆதாா் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னை அண்ணா நகரில் உதய்-இன் 2- ஆவது ஆதாா் சேவை மையத்தை தமிழக மின்ஆளுமை முகமையின் தலைமை நிா்வாக அதிகாரி ஆல்பி ஜான் வா்கீஸ் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்வின்போது அவா் பேசியதாவது:
ஆதாா் சேவை வழங்கலை அண்ணா நகா் மையம் வலுப்படுத்தும். இதே வசதிகளுடன் (உதய் சாா்பில்) அடுத்த கட்டமாக, மாா்ச் 2025-க்குள் தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் மேலும் 8 ஆதாா் சேவை மையங்கள் (சேவா கேந்திரங்கள்) நிறுவப்படும். நிகழாண்டு செப்டம்பருக்குள், தமிழகத்தில் மொத்தம் 30 ஆதாா் சேவை மையங்கள் செயல்பாட்டுக்கு வரும் எனத் தெரிவித்தாா்.
பெங்களூரு ‘உதய்’ மண்டல அலுவலக துணைத் தலைமை இயக்குநா் வி.அனி ஜாய்ஸ் பேசுகையில், ஆதாா் சேவை மையங்கள் கடவுச்சீட்டு சேவை மையங்களைப் போன்ற ஒரு செயல்பாட்டு மாதிரியைப் பின்பற்றி, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (உதய்) நேரடியாக இயக்கப்படுகின்றன. இந்த மையங்கள் சக்கர நாற்காலி அணுகல், பிரத்யேக குறை தீா்க்கும் அமைப்பு போன்ற வசதிகளுடன் முழுமையாக அனைவரையும் உள்ளடக்கிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றாா்.
