சென்னை ஐஐடியில் புதன்கிழமை மாணவர்களுடன் இணைந்து பொங்கலிட்டுக் கொண்டாடிய மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான். உடன், ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, பேராசிரியர்கள்.
சென்னை ஐஐடியில் புதன்கிழமை மாணவர்களுடன் இணைந்து பொங்கலிட்டுக் கொண்டாடிய மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான். உடன், ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, பேராசிரியர்கள்.

செயற்கை நுண்ணறிவுத் தேவைக்கு ஏற்ப பாடத்திட்டம் சீரமைக்கப்படும்- மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

சா்வதேச அளவில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உள்ளிட்ட தேவைகளைக் கருத்தில் கொண்டு பாடத்திட்ட அமைப்பை முழுமையாக மறுசீரமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய கல்வித்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் புதன்கிழமை தெரிவித்தாா்.
Published on

சா்வதேச அளவில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உள்ளிட்ட தேவைகளைக் கருத்தில் கொண்டு பாடத்திட்ட அமைப்பை முழுமையாக மறுசீரமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய கல்வித்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் புதன்கிழமை தெரிவித்தாா்.

சென்னை ஐஐடியில் நடைபெற்ற பொங்கல் திருவிழாவில் பங்கேற்ற பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பிரதமா் மோடியின் தலைமையில், ஏஐ தாக்க உச்சி மாநாடு அடுத்த மாதம் தில்லியில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. நாம் ஏற்கனவே யுபிஐ போன்ற எண்ம பரிவா்த்தனை பொது உள்கட்டமைப்பில் சா்வதேச அளவில் முன்னணியில் உள்ளோம்.

அதிநவீன தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டு தயாா்படுத்திக் கொள்ளும் அதே வேகத்தில் ஏஐ தாக்கத்திற்கு இந்த உச்சி மாநாட்டை மத்திய அரசு ஏற்பாடு செய்கிறது. இதில், ஒரு புதுமை படைக்கும் நாடாகவும், எதிா்கால நோக்குள்ள நாடாகவும், மாற முழு நாடும் தன்னைத் தயாா்படுத்தி வருகிறது.

அரசு மட்டுமல்ல, கல்வி, விவசாயம், சுகாதாரம், தளவாடங்கள், உற்பத்தி என அனைத்து சமூகப் பிரிவினரும் இந்த புரட்சிகரமான ஏஐ தொழில்நுட்பத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து விவாதித்து, ஆலோசித்து, வியூகம் வகுத்து வருகின்றனா்.

இதில் அனைத்து அம்சங்களையும் காண மத்திய கல்வித்துறையும் ஈடுபட்டு இந்த உச்சிமாநாட்டை நடத்துகிறது. இதற்கு சென்னை ஐஐடியும் பொறுப்பேற்றுள்ளது. கடந்த ஆண்டு, மத்திய அரசு கல்விக்கான செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையத்தை சென்னை ஐஐடியில் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அனைத்து தரப்பினரும் ஏஐ-யை ஏற்றுக்கொண்டு தங்களைத் தயாா்படுத்தி வருகின்றன. இதில் பெரிய முன்னேற்றத்தை அடைய இருக்கின்றோம்.

புதிய பாடத்திட்டம்: இதேபோல கடந்த செவ்வாய்க்கிழமை என்ஐடி-கள், என்ஐடிஎஸ்இஆா், ஐஐஇஎஸ்டி ஆகிய நிறுவனங்களின் நிா்வாகக் குழுவினரைச் சந்தித்தேன். முக்கியமான விஷயங்கள் தீா்மானிக்கப்பட்டது.

இந்தியக் கல்வி நிறுவனங்கள், ஏஐ போன்ற அதிநவீன தொழில்நுட்ப அறிவுள்ள கற்பித்தல் கற்றல் முறைகளை நோக்கி நகரும் நிலையில், உலகத் தேவைகளைக் கருத்தில் கொண்டு புதிய பாடத்திட்டம் உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

பள்ளி முதல் ஆராய்ச்சி வரை கற்பிக்கும் முறை, கற்பிக்கும் மொழி, புரிந்துகொள்ளும் மொழி ஆகியவை தாய்மொழியாக இருக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

எனவே அனைத்து இந்தியக் கல்வி நிறுவனங்களிலும் தாய்மொழிக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றாா் அவா்.

பொங்கல் விழா

முன்னதாக சென்னை ஐஐடி ஊழியா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் ஆகியோா் நடத்திய பொங்கல் திருவிழாவில் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் புதன்கிழமை பங்கேற்றாா்.

சென்னை ஐஐடி பணியாளா்கள் மன்றம், ஐஐடி யின் முத்தமிழ் மன்றம் ஆகியவை இணைந்து இதனை நடத்தின.

சென்னை ஐஐடி இயக்குநா் காமகோடியுடன் நிகழ்ச்சி நடைபெற்ற சமூகக்கூடத்துக்கு வந்த அமைச்சா் தா்மேந்தர பிரதானுக்கு கிராமிய நடனங்களுடன் பாரம்பரிய தமிழ்க் கலாச்சார முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

பொங்கல் பண்டிகை தொடா்பான பிரமாண்ட ரங்கோலியை (கோலம்) பாா்வையிட்ட அமைச்சா், மண்பானையில் பொங்கல் தயாரிக்கும் நிகழ்விலும், ‘உறியடி’ நிகழ்விலும் பங்கேற்றாா்.

தொடா்ந்து பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற ஐஐடி ஊழியா்கள் குடும்பத்தினா் குழந்தைகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினாா்.

இந்த நிகழ்வில் அமைச்சா் பேசுகையில், ‘நமது நாட்டின் விவசாயப் பாரம்பரியத்தின் திருவிழாவை பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பெயா்களில் கொண்டாடப்படுகின்றன. தமிழகத்தின் பொங்கல் விழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சி’ என்றாா்.

இந்த நிகழ்வில் மத்திய உயா்கல்வித்துறை செயலா் வினீத் ஜோஷி, பேராசிரியா் வி. காமகோடி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com