

முதல்வர் மு.க. ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்தில் இன்றும்(ஜன. 30) நாளையும்(ஜன. 31) இரண்டு நாள்கள் கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து புறப்பட்டு, இன்று மாலை சிவகங்கை மாவட்டத்துக்கு செல்கிறார்.
நாளை(ஜன. 31) திருப்பத்தூர் வட்டம், சிராவயல் கிராமத்தில் சுதந்திரப் போராட்ட காலத்தில் மகாத்மாகாந்தி, கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர் ப. ஜீவா ஆகியோர் சந்தித்து பேசியதன் நினைவாக அந்த இடத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ரூ. 3.27 கோடியில் கட்டப்பட்ட நினைவரங்கத்தை திறந்து வைக்கிறார்.
இதைத்தொடர்ந்து, தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று அவரது உருவச்சிலைக்கு மாலையணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்துகிறார். பின்னர், காரைக்குடி கழனிவாசல் பகுதியில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ரூ. 50 லட்சத்தில் நிறுவப்பட்ட வீறுகவியரசர் முடியரசனார் உருவச் சிலையை திறந்துவைக்கிறார்.
இதனைத் தொடர்ந்து முதல்வர் நாளை (ஜன. 31) காலையில் காரைக்குடி அருகே கானாடுகாத்தான் பேரூராட்சியில் ரூ. 61.78 கோடியில் கட்டப்பட்ட செட்டிநாடு வேளாண்மைக் கல்லூரி கட்டடத்தையும், கழனிவாசல் பகுதியில் ரூ. 100.45 கோடியில் கட்டப்பட்ட சட்டக்கல்லூரி கட்டடத்தையும் திறந்துவைக்கிறார்.
இதைத்தொடர்ந்து நடைபெறும் விழாவில் ரூ. 13.36 கோடியில் 28 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ. 2,559.50 கோடியில் 49 முடிவடைந்த திட்டப்பணிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார்.
விழாவில் 15,453 பயனாளிகளுக்கு ரூ. 205.06 கோடியிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் அவா் வழங்குகிறார். இதைத்தொடர்ந்து, காரைக்குடி கழனிவாசல் பகுதியில் ரூ. 32 கோடியில் கட்டப்பட்ட மினி டைடல் பூங்காவை முதல்வர் திறந்துவைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.