FOLLOW US

ON GOOGLE DISCOVER

/

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ‘ஹேக்’! 19,000 ரகசிய ஆவணங்கள் கசிந்ததால் பரபரப்பு!

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் ரகசிய ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதைப் பற்றி...

News image

கூடங்குளம் அணு மின் நிலையம் - கோப்புப் படம்

Updated On :15 ஜூலை 2026, 5:15 pm IST

தமிழ்நாட்டின் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உள்கட்டமைப்பு மற்றும் சப்ளையர்கள் தொடர்பான ஆயிரக்கணக்கான ரகசிய ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் கூடங்குளத்தில் அமைந்துள்ளது. ரஷிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட நீர் அழுத்த அணு உலைகளில் மொத்தமாக 7 அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அணு உலையில், தலா 1000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அணு உலைகள் முழுமையாக செயல்பாட்டில் உள்ளன.

வேர்ல்ட் லீக்ஸ் என்ற ஹேக்கர்கள் குழு, இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் தொடர்பான ஏராளமான கோப்புகளை டார்க் வெப்பில் வெளியிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அணுமின் நிலையத்தின் வரைபடங்கள், விநியோகஸ்தர்களின் விவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய ரகசியக் கோப்புகளை டார்க் வெப் இணையத்தில் கசியவிட்டிருக்கிறது. இந்தத் தரவுகள் தொழிலதிபரான அனில் அம்பானிக்குத் தொடர்புடையது எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் கூறுகையில், “மூன்றாம் தர இந்திய தரவு மையத்தின் சேவை நிறுவனமான யோட்டாவின் சர்வரிலிருந்து பகுதியளவு தரவுகள் கசிந்திருக்கின்றன. இதுதொடர்பாக அரசுக்குத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும்” தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்தத் தரவுகள் கசிந்தன என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை ரிலையன்ஸ் குழுமம் வெளியிடவில்லை.

வேர்ல்ட் லீக்ஸ் இணையதளத்தில் கசியவிடப்பட்டுள்ள மொத்தமுள்ள 8,58,000 ரிலையன்ஸ் கோப்புகளில் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்குச் சொந்தமான 19,000 ரகசியக் கோப்புகள் என்று அடையாளம் கண்டறியப்பட்டுள்ளன.

இவை 2016 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு இடையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவை என்றும் கூறப்படுகிறது. ஆனாலும், அதற்கான தெளிவான விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை. கடந்த மே 29 அன்று ரிலையன்ஸ் சர்வரில் சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டை கண்டறிந்து உடனடியாக அதைத் தடுத்ததாக யோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்தக் கோப்புகளில், காற்று வெளியேற்றம், குளிரூட்டும் அமைப்பு, பொது கட்டுப்பாட்டு அறைக்கான லே அவுட்கள், தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டால் 112 மில்லியன் டாலர் காப்பீடு பாலிசிகள், கருவிகள் பரிசோதனை விவரம், விநியோகஸ்தர்களின் பட்டியல், மின்நிலையத்தின் பொருள்களின் புகைப்படங்கள், அணுசக்தி கழகம் மற்றும் ரிலையன்ஸ் இணைந்து நடத்தவிருந்த ஆய்வு குறித்த 2024 ஆம் ஆண்டு கூட்டத்தின் பதிவுகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

ரியலைன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், அணுமின் நிலையத்தின் யூனிட் 3 மற்றும் யூனிட் 4-க்கான கட்டமைப்பை வடிவமைக்கப்பதற்கான ஒப்பந்தத்தை 2018-ல் பெற்றிருந்தது. இதன் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் சூழலில், 2027-ஆம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

மிகவும் பிரபல ஹேக்கிங் தரவுகள் திருட்டுக் கும்பலான வேர்ல்ட் லீக்ஸ், இதற்கு முன்னதாக நைக் மற்றும் டாடா நிறுவனத்திடம் தரவுகள் வெளியிட்டுவதாகவும், இதற்காக 15 லட்சம் அமெரிக்க டாலர்கள் பிணைத்தொகையாக கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதை டாடா நிறுவனம் மறுத்ததால், ஆப்பிள், டெஸ்டா நிறுவனங்களுக்கு உதிரிபாகங்கள் தயாரித்துத் தருவது தொடர்பாக தரவுகளை வேர்ல்ட் லீக்ஸ் நிறுவனம் இணையத்தில் கசியவிட்டது.

அணுமின் நிலையங்களை இயக்கும் இந்திய அணுசக்தி கழகம் மற்றும் இந்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முதன்மை இணையப் பாதுகாப்புக்குழுவினர் ஹேக்கிங் சம்பவம் குறித்து ரிலையன்ஸ் நிறுவனத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றன.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இதுபோன்று ஹேக் செய்யப்படுவது இது முதல்முறையல்ல. ஏற்கனெவே, 2019-ஆம் ஆண்டில், வட கொரிய ஹேக்கர் குழு தரவுகள் திருடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

A ransomware group has published a large cache of stolen data on the dark web, claiming it includes blueprints of parts of India's largest nuclear power plant Kudankulam. The hackers said the data was obtained from Anil Ambani's Reliance Group, a contractor at the plant.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.