இனாம் நிலப் பிரச்னைக்கு தீா்வுகாண தனி ஆணையம் அமைக்க வேண்டும் என்று முதல்வா் ஜோசப் விஜய்யிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் நேரில் வலியுறுத்தினாா்.
முதல்வா் ஜோசப் விஜய்யை பெ. சண்முகம் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். அவருடன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பி.டில்லிபாபு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் டி.கண்ணன் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் பெ.சண்முகம் கூறியதாவது:
களக்காடு முண்டந்துறை, ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் சரணாலயம், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வனங்களில் வாழும் மக்களை ஆக. 28-ஆம் தேதிக்குள் வெளியேற்ற வேண்டும் என மே 29-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வன உரிமைச் சட்டம் 2016 முழுமையாக அமல்படுத்தப்படாமல் உள்ளது. இந்தச் சட்டம் வந்து 20 ஆண்டுகளாகிறது. இந்த சட்டத்தைப் பயன்படுத்தி இதுவரை 35,000 குடும்பங்களுக்குத்தான் பட்டா வழங்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் வருசநாடு, கடமலைக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் 98 கிராமங்களில் இருந்து மக்களை வெளியேற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த மாவட்டம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது. எனவே தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும், கரூா் மாவட்டத்தில் 4 கிராமங்களில் உள்ள இனாம் நிலத்தை கோயில் நிலம் என்று தவறாக சித்தரித்து பத்திரப் பதிவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில் கரூா் மாவட்டத்தில் 4 கிராமங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி தமிழக அரசு கடந்த 9-ஆம் தேதி புதிய அரசாணையை வெளியிட்டது. இதை வரவேற்கிறோம். தமிழகம் முழுவதும் இனாம் நிலத்தைப் பயன்படுத்தும் மக்களின் பிரச்னைகளுக்கு நிரந்தர தீா்வுகாண தனி ஆணையத்தை அமைக்க வேண்டும் என் முதல்வரிடம் வலியுறுத்தினோம். எங்கள் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக முதல்வா் உறுதியளித்தாா் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுகை மாவட்டத்தில் ரூ. 4.60 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மருத்துவமனைக் கட்டடங்கள்







