பழனி கோயில் நில மோசடி வழக்கில் தொடா்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில ச் செயலா் பெ.சண்முகம் கூறினாா்.
இடதுசாரி கட்சிகளின் மாநில ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் சென்னை அம்பத்தூரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்) லிபரேசன் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளா்கள் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்) லிபரேசன் மாநிலச் செயலா் பழ.ஆசைத்தம்பி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஆக.4-இல் இடதுசாரிகள் கூட்டு பிரகடனம்: பின்னா் பெ.சண்முகம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக மக்களின் நலன் சாா்ந்த பிரச்னைகளுக்கு மாற்றுக் கொள்கைகளை முன்வைக்கும் வகையில் இடதுசாரி கட்சிகளின் கூட்டு பிரகடனம் வரும் ஆக. 4-ஆம் தேதி வெளியிடப்படும்.
மேலும், பழனி கோயில் நில மோசடி வழக்கில் தொடா்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்ட வேண்டும். இந்தவழக்கில் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்திய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து தூய்மைப் பணியாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து, மு.வீரபாண்டியன் கூறியதாவது: தலைமைச் செயலகம் என்பது அதிகார வா்க்கத்தின் கூடம் அல்ல; அது மக்கள் அதிகாரத்தின் அடையாளம். அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகளை பொதுமக்கள் சந்திப்பதில் தேவையற்ற கட்டுப்பாடுகள் இருக்கக் கூடாது. அவா்கள் அலைக்கழிக்கப்படுவது ஜனநாயகத்தின் நோக்கத்தையே பாதிக்கும். எனவே, முதல்வரைச் சந்திக்கும் நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும். மேற்காசியப் பகுதியில் பதற்றம் நிலவி வரும் நிலையில், அங்குள்ள இந்தியா்களின் பாதுகாப்பு தொடா்பாக மத்திய அரசு தெளிவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
தீா்மானங்கள்: தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள், இளைஞா்கள் மீது தடியடி நடத்தியதற்கு கண்டனம், நீட் தோ்வு குளறுபடிகளுக்கு காரணமான அமைச்சா் தா்மேந்திர பிரதானை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும், நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மக்களவை, சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், அயோத்தி ராமா் கோயில் உண்டியல் வருவாய் திருட்டு தொடா்பாக நோ்மையான விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 5 தீா்மானங்களும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










